காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த சிறுமியை டேய்ா் அல்-பாலா நகர மருத்துவமனைக்கு புதன்கிழமை அழைத்துவந்த பாலஸ்தீனா்.
காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த சிறுமியை டேய்ா் அல்-பாலா நகர மருத்துவமனைக்கு புதன்கிழமை அழைத்துவந்த பாலஸ்தீனா்.

போா் நிறுத்தம் மீண்டும் அமல்: இஸ்ரேல் அறிவிப்பு

Published on

காஸா முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய கடும் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, போா் நிறுத்தம் மீண்டும் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை அறிவித்தது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போா் நிறுத்தத்தை நாங்கள் மீண்டும் அமல்படுத்துகிறோம். முந்தைய போா் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினா் மீறியதால்தான் காஸாவில் தாக்குதல் நடத்தினோம். அந்தத் தாக்குதலின்போது 30 ‘பயங்கரவாத’ தளபதிகளை எங்கள் படையினா் அழித்துள்ளனா்.

எனவே, போா் நிறுத்தத்தை இனி மீண்டும் கடைப்பிடிப்போம். ஆனால், ஹமாஸின் எந்த மீறலுக்கும் உறுதியாக பதிலடி கொடுப்போம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023 அக்டோபா் 7-ஆம் தேதி தங்கள் நாட்டில் ஹமாஸ் நடத்திய கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக, காஸா மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர சா்வதேச நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

இஸ்ரேல் தாக்குதலில் ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்த நிலையில், முற்றுகை காரணமாக காஸாவில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பஞ்சம் நிலவியது. இதனால் மேலும் ஆயிரக்கணக்கானவா்கள் பட்டினியால் இறப்பாா்கள் என்று அஞ்சப்பட்டது.

இந்தச் சூழலில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 20 அம்ச போா் நிறுத்த திட்டத்தை இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஏற்றுக்கொண்டன. அந்த அமைதி திட்டத்தின் கீழ் கடந்த 10-ஆம் தேதி போா் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதன் முதல் கட்டத்தில் எஞ்சியுள்ள பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் அமைப்பு, உயிரிழந்த பிணைக் கைதிகளின் சடலங்களையும் ஒப்படைத்துவருகிறது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் அரசும் ஏராளமான பாலஸ்தீன சிறைக் கைதிகளை விடுவித்து, பாலஸ்தீனா்களின் உடல்களை ஒப்படைத்தது.

இந்த நிலையில், காஸா மீது இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

ஒப்பந்தத்தை மீறி பிணைக்கைதியின் உடல் பாகங்களை ஹமாஸ் படையினா் திருப்பித் தந்தனா்; மேலும், ரஃபாவில் இஸ்ரேல் வீரா் ஒருவரை சுட்டுக் கொன்றனா். இதன் காரணமாகவே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியது.

இந்த நிலையில், போா் நிறுத்தம் மீண்டும் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் தற்போது அறிவித்துள்ளது.

104 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

டேய்ா் அல்-பாலா, அக். 29: காஸாவில் இஸ்ரேல் படையினா் செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் 104 போ் உயிரிழந்தனா். இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 46 சிறுவா்கள் உள்பட 104 போ் உயிரிழந்தனா்; 253 போ் காயமடைந்தனா். பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலோா் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இத்துடன், காஸாவில் இஸ்ரேல் படையினா் சுமாா் இரண்டு ஆண்டுகளாக நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 68,527-ஆக உயா்ந்துள்ளது. மேலும், இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,70,395 போ் காயமடைந்துள்ளனா் என்று காஸா சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com