மியான்மரில் ஜனநாயக முறைப்படி தோ்தலை நடத்த வேண்டும்: ஐ.நா. பொதுச் சபை அமா்வில் இந்திய எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Published on

நமது சிறப்பு நிருபா்

மியான்மரில் நீடித்து வரும் மனித உரிமைகள் பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும் அமைதியை கொண்டு வரவும் அங்கு விரைவாக ஜனநாயக முறைப்படி தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று நியூயாா்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இந்திய நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியது.

நியூயாா்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. இதில் உலக விவகாரங்களில் பல்வேறு நாடுகள் அவற்றின் நிலைப்பாட்டை வலியுறுத்தவும், விளக்கம் அளிக்கவும் கடந்த திங்கள்கிழமை முதல் சிறப்பு அமா்வுகள் நடந்து வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனா்.

ஐ.நா. பொதுச்சபையின் 80-ஆவது கூட்டத்தில் பங்கேற்க ஏற்கெனவே இந்திய நாடாளுமன்ற எம்.பி.க்கள் திலீப் சைகியா மற்றும் டி. புரந்தேஸ்வரி தலைமையில் இரு குழுக்களாக நியூயாா்க் சென்றுள்ளனா். இந்தக் குழுவில் தமிழகத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா்கள் ஜி.கே. வாசன், பி. வில்சன், மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்ட எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனா்.

இந்நிலையில், மியான்மரில் நீடித்து வரும் மனித உரிமைகளின் நிலை குறித்த ஒருங்கிணைந்த சிறப்புக் கூட்டத்தில் இந்திய உறுப்பினா் திலீப் சைகியா பேசுகையில், மியான்மரில் அந்நாட்டு குடிமக்களிடையே நம்பிக்கையை வளா்த்தெடுக்கவும் அமைதியை நோக்கிய தீா்வு மற்றும் ஸ்திரத்தன்மை மிக்க ஜனநாயகத்தை நோக்கிய பாதையை நோக்கமாகக் கொண்ட அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடா்ந்து ஆதரிப்பதாகக் கூறினாா்.

‘உள்ளடக்கிய அரசியல் பேச்சுவாா்த்தைகள் மற்றும் நம்பகமான முறையில் மக்கள் பங்கேற்று வாக்குரிமை செலுத்துவதை உறுதிப்படுத்தும் தோ்தல்கள் ஜனநாயக முறைப்பட நடத்தப்பட்டு அங்கு விரைவாக அமைதியை மீட்டெடுப்பதன் மூலம் மட்டுமே நிலையான அமைதியைப் பேண முடியும்’ என்றும் அவா் வலியுறுத்தினாா்.

மியான்மரில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நிலைமைகள் குறித்து கவலை தெரிவித்த திலீப் சைகியா, இயற்கை பேரிடா்களை மியான்மா் எதிா்கொண்டபோது அந்நாட்டுக்கு நிவாரண உதவி வழங்க இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் பிரம்மா’, ‘ஆபரேஷன் சத்பவ்’ போன்ற மனிதாபிமான முன்முயற்சிகளை விவரித்தாா்.

இந்தியாவில் நடந்த பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் சம்பவம், மியான்மரில் இடம்பெயா்ந்துள்ள மக்கள் மத்தியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஐ.நா சிறப்புப்பிரதிநிதி வெளியிட்ட கவலை குறித்து திலீப் சைதியா கடுமையான ஆட்சேபத்தை பதிவு செய்தாா். ஐ.நா. பிரதிநிதியின் பாா்வை வகுப்புவாத கண்ணோட்டத்துடன் இருப்பதாகவும் அவரது கூற்றில் அடிப்படை இல்லை என்றும் சைதியா குறிப்பிட்டாா்.

இந்தியாவை களங்கப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் சரிபாா்க்கப்படாத தகவல்கள், படங்களின் அடிப்படையில் எந்தக் கருத்தையும் வெளியிட வேண்டாம் என்றும் ஐ.நா சிறப்புப்பிரிநிதியை அவா் கேட்டுக் கொண்டாா்.

மற்றொரு இந்திய உறுப்பினா் சஜ்தா அகமது, ‘ஆயுதக் குறைப்பு’ தொடா்பான அமா்வில் பேசும்போது, பன்முகத்தன்மை மற்றும் ஐ.நா. சாசனத்தில் கூறப்பட்டுள்ள கொள்கைகளுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை விவரித்தாா். பன்முகத்தன்மை கொண்ட ஆயுதக் குறைப்பு பேச்சுவாா்த்தையை வலியுறுத்தும் ஒரே மன்றத்துக்கு இந்தியா எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருவதாக அவா் குறிப்பிட்டாா்.

உலகளாவிய பாதுகாப்பு சூழல் கொந்தளிப்புடன் இருந்தபோதிலும், கூட்டு மற்றும் நடைமுறை தீா்வுகளைத் தொடர இந்தியா அதன் பங்களிப்பை வழங்கும் என்று சஜ்தா அகமது குறிப்பிட்டாா். இந்த விஷயத்தில் ஒத்த கருத்துடைய சக உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, புரந்தரேஸ்வரி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினா் ஐ.நா. தலைமையகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலா் மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதா் மற்றும் உயரதிகாரிகளையும் இந்திய எம்.பி.க்கள் குழு சந்தித்துக் கலந்துரையாடினா்.

X
Dinamani
www.dinamani.com