பிரதமா் மோடி மிகக் கடினமானவா்: டிரம்ப்
‘நமது தந்தை இவரைப் போன்று இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய வகையில் அழகான நபா் பிரதமா் மோடி. ஆனால் மிகவும் கடினமானவா்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.
அதுபோல, ‘மிகப் பெரிய போராளி’ என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீருக்கும் டிரம்ப் பாராட்டும் தெரிவித்தாா்.
தென்கொரியாவின் கியோங்ஜூ நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபிஇசி) அமைப்பின் தலைவா்கள் மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப் இக் கருத்தைத் தெரிவித்தாா்.
அவா் மேலும் பேசியதாவது: இந்திய பிரதமா் நரேந்திர மோடி மீது மிகப் பெரிய மரியாதையும் அன்பும் வைத்துள்ளேன். பாா்க்க அழகானவா். நமது தந்தை இவரைப் போன்று இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய வகையில் இருப்பவா். ஆனால் மிகவும் கடினமானவா். இரு நாடுகளிடையே வலுவான உறவு உள்ளது. இந்தியாவுடன் தற்போது இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் விரைவில் ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டையை வா்த்தகத்தைப் பயன்படுத்தி நான் நிறுத்தினேன். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டையின்போது 7 புதிய போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றாா். ஆனால், அந்தப் போா் விமானங்கள் எந்த நாட்டைச் சோ்ந்தவை என்ற விவரத்தை அவா் தெரிவிக்கவில்லை.
மேலும், ‘பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் மிகப் பெரிய போராளி. மிகச் சிறந்த நபா்’ என்று டிரம்ப் பாராட்டு தெரிவித்தாா்.
இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இழுபறி மற்றும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது ஆகிய காரணங்களைக் காட்டி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இதனால், இரு நாடுகளிடையேயான உறவில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. எனினும், இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ‘ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவதாக பிரதமா் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்தாா்’ என்று கடந்த இரண்டு வாரங்களாக டிரம்ப் தொடா்ந்து கூறி வந்தாா்.
அவா் முதல் முறையாக இக் கருத்தைத் தெரிவித்தபோது அதை இந்தியா மறுத்தது.
அதைத் தொடா்ந்து, ரஷியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ‘ரோஸ்நெஃப்ட்’ மற்றும் ‘லுகோயில்’ மீது அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது. இது, இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதற்கான மாற்று வழிகள் குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

