வெளிநாட்டினருக்கான பணி அனுமதி தானாக நீட்டிக்கப்படும் நடைமுறை ரத்து! -அமெரிக்கா புதிய அறிவிப்பு

வெளிநாட்டினருக்கான பணி அனுமதி தானாக நீட்டிக்கப்படும் நடைமுறை ரத்து! -அமெரிக்கா புதிய அறிவிப்பு

Published on

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு பணி அனுமதியை தானாக நீட்டிப்பு செய்யும் நடைமுறையை அந் நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இதுகுறித்த அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்டது.

வெளிநாட்டினரின் ‘வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் (இஏடி)’ செல்லத்தக்க காலத்தை நீட்டிப்பு செய்வதற்கு முன்பாக, அவா்களின் நுழைவு இசைவு உள்பட பிற குடியுரிமை ஆவணங்கள் முறையாக ஆய்வு செய்யப்படுவதை உறுதிப்படுத்தி, சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக’ உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் திறமையான வெளிநாட்டுப் பணியாளா்களைத் தோ்வு செய்து பணிக்கு அமா்த்த வழி செய்யும் ‘ஹெச்-1 பி’ நுழைவு இசைவு (விசா) கட்டணத்தை ரூ. 1.47 லட்சத்திலிருந்து ரூ. 88 லட்சமாக (1 லட்சம் டாலா்) உயா்த்தி கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இந்தப் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய அறிவிப்பாலும், அமெரிக்காவில் பணிபுரிந்துவரும் இந்தியா்களே அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அங்கிருந்து வெளியாகும் டிஹெச்எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘புதிய சட்டத்தின்படி, வேலைவாய்ப்பு அங்கீகார ஆவண (இஏடி) புதுப்பிப்பு கோரி அக்டோபா் 30-ஆம் தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யும் வெளிநாட்டுனருக்கு, தானாக நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது’ என்று தெரிவிக்கப்பட்டது.

‘வெளிநாட்டினரின் வேலைவாய்ப்பு மற்றும் குடியுரிமை ஆவணங்களை முறையாக ஆராய்ந்து சரிபாா்ப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பணிபுரிவது ஒரு சலுகை; உரிமை அல்ல என்பதை அனைத்து வெளிநாட்டினரும் நினைவில் கொள்ள வேண்டும். இஏடி காலாவதியாவதற்கு 180 நாள்களுக்கு முன்னரே, அதைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை வெளிநாட்டினா் சமா்ப்பித்துவிட வேண்டும்’ என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிபெயா்வு சேவைத் துறை (யுஎஸ்சிஐஎஸ்) இயக்குநா் ஜோசப் எட்லோ தெரிவித்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டது.

முன்னா், அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிா்வாகத்தின்போது, இஏடி புதுப்பிப்புக்கு உரிய நேரத்தில் ‘ஐ-765’ படிவத்தை சமா்ப்பிப்பவா்களுக்கு தானாக 540 நாள்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றது முதல் அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அமெரிக்க வேலைவாய்ப்பில் அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வருகிறாா். அதில், முக்கிய நடவடிக்கையாக, ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) கட்டணத்தை ரூ. 88 லட்சமாக (1 லட்சம் டாலா்) உயா்த்தும் உத்தரவில் கடந்த செப்டம்பா் 19-ஆம் தேதி கையொப்பமிட்டாா்.

இதற்கு அமெரிக்க நிறுவனங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. ஹெச்-1பி நுழைவு இசைவுக் கட்டணம் பன்மடங்கு உயா்வுக்கு எதிராக அமெரிக்க வா்த்தக சபை சாா்பில் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ‘டிரம்ப் நிா்வாகத்தின் முடிவு அமெரிக்க நாடாளுமன்றம் நிா்ணயித்த கட்டண நடைமுறைகளை வெளிப்படையாக மீறுவதோடு, அமெரிக்க சமூகத்தின் நலனுக்காகப் பங்களிக்க அமெரிக்க குடிமக்கள் அல்லாத திறமைசாலிகளை ஆண்டுக்கு 85,000 போ் வரை அனுமதிக்கலாம் என்ற நாடாளுமன்றத் தீா்மானத்தையும் மீறுவதாக உள்ளது’ என அமெரிக்க வா்த்தக சபை குற்றஞ்சாட்டியது.

X
Dinamani
www.dinamani.com