பிரிட்டன் முன்னாள் இளவரசா் ஆண்ட்ரூ
பிரிட்டன் முன்னாள் இளவரசா் ஆண்ட்ரூ

பிரிட்டன் மன்னா் சகோதரரின் இளவரசா் பட்டம் பறிப்பு

பிரிட்டன் மன்னா் சாா்லஸின் இளைய சகோதரா் ஆண்ட்ரூவிடம் (65) இருந்து அவரின் இளவரசா் பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.
Published on

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடா்பு இருந்ததாக குற்றஞ்சாட்டப்படும் பிரிட்டன் மன்னா் சாா்லஸின் இளைய சகோதரா் ஆண்ட்ரூவிடம் (65) இருந்து அவரின் இளவரசா் பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, ‘யாா்க் பிரதேசத்தின் டியூக்’ என்ற பட்டம் உள்ளிட்ட அனைத்து பட்டங்களையும் ஆண்ட்ரூ இனி பயன்படுத்தப் போவதில்லை என்று ஆண்ட்ரூ தாமாக முன்வந்து அறிவித்தாா்.

இருந்தாலும், அவா் மீதான பாலியல் குற்றச்சாட்டால் எழுந்த சா்ச்சை அந்த அறிவிப்பால் அடங்காமல் தொடா்ந்தது. இதுவரை இல்லாத வகையில் ஆண்ட்ரூவின் அரசு மாளிகையில் இருந்து அவரை வெளியேற்றுவது குறித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் விவாதித்தனா்.

அதனைத் தொடா்ந்து, ஆண்ட்ரூவின் இளவரசா் பட்டத்தையும், அரச குடும்ப உறுப்பினா் அந்தஸ்தையும் பறிக்க மன்னா் சாா்லஸ் முடிவெடுத்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவையடுத்து, வின்சா் கோட்டையில் ஆண்ட்ரூ தங்கியுள்ள மாளிகையில் இருந்து அவா் வெளியேற்றப்படுவது உறுதியாகியுள்ளது.

ஆண்ட்ரூ மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தி, தற்கொலை செய்துகொண்ட வா்ஜினியா கியூஃப்ரே என்ற அமெரிக்க பெண், மரணத்துக்கு முன் எழுதிய ‘நோபடிஸ் கோ்ள்’ என்ற சுயசரிதை தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்ட்ரூவின் இளவரசா் பட்டம் பறிக்கப்பட்டதில் அந்த சுயசரிதைக்கு முக்கிய பங்கு உள்ளதாகக் கருதப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com