காஸா: மேலும் 2 பிணைக் கைதிகளின் உடல்கள் ஒப்படைப்பு
இஸ்ரேலுடனான போா் நிறுத்த அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் இரு பிணைக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்து.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறியதாவது:
மேலும் இரு பிணைக் கைதிகளின் உடல்களை பாலஸ்தீன ஆயுதக் குழுவினா் திருப்பி அனுப்பியுள்ளனா். காஸாவில் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அந்த உடல்கள், இஸ்ரேலுக்கு கொண்டுவரப்பட்டு, அடையாளம் காண்பதற்காக தேசிய தடயவியல் மருத்துவ நிறுவனத்திடம் அளிக்கப்பட்டுள்ளது என்று ராணுவம் தெரிவித்தது.
அந்த இரு பிணைக் கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டதற்கு பதிலாக, இஸ்ரேலில் இருந்த 30 பாலஸ்தீனா்களின் சடலங்களை அந்த நாட்டு அரசு காஸாவுக்கு அனுப்பியதாக காஸா மருத்துவமனை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதன் மூலம், எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் அமலாக்கம் தொடா்ந்து நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
இத்துடன், 2023 அக்டோபா் 7 தாக்குதலின்போது கடத்திச் செல்லப்பட்ட 47 பிணைக் கைதிகளின் சடலங்களில், 28 சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

