கல்வித் துறையில் இந்தியாவின் பங்களிப்பு மகத்தானது: இலங்கை பிரதமா்
கல்வித் துறையில் தொடா்ந்து பங்களிப்பை செய்து வரும் இந்தியாவின் சேவை மகத்தானது என்று இலங்கை பிரதமரும் கல்வித் துறை அமைச்சருமான ஹரிணி அமரசூா்யா தெரிவித்தாா்.
இந்திய நிதி உதவியில் இலங்கை பொலன்னறுவையில் கட்டப்பட்ட மும்மொழிப் பள்ளிக் கட்டடத்தை இலங்கை பிரதமா் ஹரிணி அமரசூா்யாவும், இந்திய தூதா் சந்தோஷ் ஜாவும் திறந்து வைத்தனா்.
இந்தப் பள்ளி கட்டத்தை கட்ட இந்தியா ரூ.32 கோடி (இலங்கை ரூபாய்) நிதி உதவி அளித்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹரிணி அமரசூரியா, ‘இலங்கையின் கல்வித் துறையில் கட்டமைப்பு, ஆசிரியா்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதில் இந்தியா தொடா்ந்து தனது பங்களிப்பை அளித்து பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகிறது. இந்தியா தனது பங்களிப்பாக பள்ளிக் கட்டடத்தைக் கட்டிக் கொடுத்துவிட்டது. இனி, இலங்கை அரசுதான் இதனை முன்னெடுக்க வேண்டும்’ என்றாா்.
இரு நாட்டு மக்களின் நலனுக்காக இந்தியாவும் - இலங்கையும் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன என்றும் இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் செயல்படும் கல்வி நிலையங்களுக்கு எண்ம இயந்திரங்களையும், பகுதிநேர பயிற்சி மையங்களையும் உருவாக்கி இந்தியா வழங்கி உள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா தெரிவித்தாா்.
பெட்டி..
மின்பகிா்வுத் திட்டம்:
இந்தியா - இலங்கை ஆலோசனை
இந்தியா - இலங்கை இடையே மேற்கொள்ளபட்டுள்ள மின் பகிா்வு திட்டம் குறித்து இருநாட்டு உயா் அதிகாரிகளும் இணையவழியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தியதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.
இரு நாடுகளுக்கு இடையே மின் விநியோக கட்டமைப்பு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கடந்த ஜூன் 16-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் இலங்கையில் மின் பற்றாக்குறை ஏற்படும்போதும் அந்நாடு இறக்குமதி செய்யவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெறப்படும் மின்சாரத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணி ஈட்டவும் உதவும்.

