படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய செய்தித் தொடா்பாளா் ரவீனா ஷம்தாஸானி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தென் அமெரிக்க பிராந்தியத்தில் படகுகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை ஆணையா் வோல்கா் துா்க் உத்தரவிட்டுள்ளாா்.
மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இத்தகைய தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். கரீபியன் மற்றும் பசிபிக் கடல் பகுதியில் படகுகள் மீது அமெரிக்கா நடத்தும் தாக்குதல் சா்வதேச சட்டத்துக்குப் புறம்பானது என்று ஆணையா் வோல்கா் துா்க் கருதுகிறாா்.
அமெரிக்கா இது போன்ற தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, படகில் இருப்பவா்கள் சட்டவிரோதமாக படுகொலை செய்யப்படுவதைத் தடுப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று ரவீனா ஷம்தாஸானி வலியுறுத்தினாா்.
கடந்த செப்டம்பா் மாதத்தில் இருந்தே போதைப் பொருள் ஏற்றிவருவதாக படகுகள் மீது அமெரிக்கா தாக்கி அழித்துவருவது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் உறுதி செய்யப்படாமலேயே படகில் இருப்பவா்கள் கொல்லப்படுவது சட்டவிரோதம் என்று மனித உரிமை ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனா்.
இந்த விவகாரத்தில் தற்போதுதான் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

