

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடம் அமெரிக்க வாழ் இந்திய மாணவி ஒருவர் எழுப்பிய கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கலந்துகொண்டு பேசினார்.
தொடர்ந்து ஜே.டி. வான்ஸிடம் அமெரிக்க வாழ் இந்திய மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார்.
"அமெரிக்காவில் வெளிநாட்டினர் அதிகமிருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள், அந்த எண்ணிக்கையை நீங்கள் எப்போது முடிவு செய்தீர்கள்? எங்களுக்கு ஏன் கனவை விற்றீர்கள்? இந்த நாட்டில் எங்களுடைய இளமையையும் பணத்தையும் செலவிடச் செய்து எங்களுக்கு ஒரு கனவைக் கொடுத்தீர்கள். இதற்காக நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு எதுவும் கடன்பட்டிருக்கவில்லை.
இப்போது வெளிநாட்டினர் அதிகமாக இருக்கின்றனர், அவர்களை வெளியேற்றப்போகிறோம் என்று எப்படி நீங்கள் கூற முடியும்? நீங்கள் கேட்ட பணத்தை கொடுத்த எங்களை இப்போது எப்படி வெளியேற்ற முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மாணவியின் இந்த கேள்விக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு பதிலளித்த ஜே.டி. வான்ஸ்,
"சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இப்போது 10 பேர் அல்லது 100 பேர் சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்குள் வருவதனால், எதிர்காலத்தில் லட்சக்கணக்கில் வெளிநாட்டு மக்களை உள்ளே அனுமதிக்கப் போகிறோம் என்று அர்த்தமா? பல தசாப்தங்களுக்கு முன்பு இருந்த நடைமுறை இப்போது அமெரிக்காவுக்கு உதவாது.
அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் என்னுடைய வேலை முழு உலகத்தின் நலன்களைள் கவனிப்பதல்ல. அமெரிக்க மக்களின் நலனை கவனிப்பதுதான்" என்று கூறியுள்ளார்.
அதே மாணவி, வான்ஸிடம் கிறிஸ்தவம் பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளார். இது குழப்பத்தை ஏற்படுத்திய போதிலும் வான்ஸ், தனது இந்திய வம்சாவளி மனைவி உஷா வான்ஸ் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினார்.
அமெரிக்காவிற்கு வேலைக்காக வரும் வெளிநாட்டினரைக் கட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இது முதல்வர் பதவிக்கே அவமானம்! - மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.