
கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ தாண்டியுள்ளதாக தலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குனார், நாங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் கடந்த ஆக. 31 நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின், நிலப்பரப்புக்கு 8 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6 ஆகப் பதிவானதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, குனான் மாகாணத்தில் சுமார் 8,000-க்கும் அதிகமான வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த நிலநடுக்கத்தினால் பலியானோரது எண்ணிக்கை 1,400 ஆக அதிகரித்ததுடன், 3,521 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இத்துடன், இடிபாடுகளினுள் சிக்கி மாயமானவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில், நிலநடுக்கத்தால் பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 1,000 குடும்பங்கள் தங்குவதற்கான கூடாரங்கள் உள்பட ஏராளமான நிவாரணப் பொருள்கள் இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.