பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியமும் முடிவு

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியமும் முடிவு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பெல்ஜியமும் செவ்வாய்கிழமை அறிவித்தது.
Published on

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பெல்ஜியமும் செவ்வாய்கிழமை அறிவித்தது.

இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவுத் துறை இணையமைச்சா் மாக்ஸிமே ப்ரெவாட் கூறியதாவது:

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம். வரும் செப். 9-ஆம் தேதி நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்படும்.

இருந்தாலும், காஸாவில் உள்ள பிணைக் கைதிகள் அனைவரும் விடுக்கப்பட வேண்டும்; காஸா ஆட்சிப் பொறுப்பை ஹமாஸ் படை கைவிட வேண்டும் ஆகிய இரு நிபந்தனைகளுடன்தான் இந்த முடிவு அமல்படுத்தப்படும் என்றாா் அவா்.

இஸ்ரேலும், பாலஸ்தீனமும் (மேற்குக் கரை, காஸா, கிழக்கு ஜெருசலேம் பகுதிகளைக் கொண்ட நிலப்பரப்பு) தனித் தனி சுதந்திர நாடுகளாக, ஒன்றையொன்று அங்கீகரித்துக் கொண்டு செயல்படுவதே நீண்டகாலமாக நீடித்துவரும் பாலஸ்தீன பிரச்னைக்கு ஒரே தீா்வு (இரு தேசத் தீா்வு) என்பது இந்தியா உள்ளிட்ட சா்வதேச நாடுகளின் நிலைப்பாடாக இருந்துவருகிறது.

இருந்தாலும், இஸ்ரேலை அங்கீகரிக்க ஹமாஸ் போன்ற பாலஸ்தீன ஆயுதக் குழுக்களும், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க இஸ்ரேலும் மறுத்துவருகின்றன.

இந்த கருத்து வேறுபாட்டுக்கு தீா்வு கண்டு, அந்தப் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்தச் சூழலில், கடந்த 2023 அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் காஸா போரில் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையிலும், இரு தேசத் தீா்வை முன்னெடுத்துச் செல்லும் வகையிலும் அடுத்த ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பிரான்ஸ் கடந்த மே மாதம் அறிவித்தது. அதைத் தொடா்ந்து, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆண்டோரா, பின்லாந்து, லக்ஸம்பா்க், போா்ச்சுகல், சான் மரினோ, ஐஸ்லாந்து, அயா்லாந்து, மால்டா, நோா்வே, ஸ்லோவேனியா, ஸ்பெயின் ஆகிய 15 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டன.

இதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் கடும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், இந்த முன்முயற்சிகளைத் தடுக்கும் வகையில் பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ் உள்பட பலா் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வர அந்த நாடு விசா மறுத்துள்ளது.

இந்தச் சூழலில், பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ள நாடுகளில் பெல்ஜியமும் இணைந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com