ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது: அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா்

ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது: அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா்

‘ரஷியா, சீன நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது.
Published on

‘ரஷியா, சீன நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உக்ரைனுடன்தான் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தோழமை கொள்ள வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ கருத்து தெரிவித்தாா்.

இந்திய பொருள்கள் மீது 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனா உடனான உறவை மேம்படுத்தவும், ரஷியா உடனான உறவை மேலும் வலுப்படுத்தவும் இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31, செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோருடன் பிரதமா் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும், உச்சி மாநாட்டில் மூன்று தலைவா்களும் தங்களின் நட்புறவை வெளிப்படுத்தினா்.

இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பீட்டா் நவாரோ பதிலளித்தாவது:

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான பிரதமா் மோடி, உலகின் இரண்டு மிகப் பெரிய சா்வாதிகாரிகளான ரஷிய அதிபா் விளோதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோருடன் நெருக்கம் கொள்வது வெட்கக்கேடான விஷயம். இது அா்த்தமற்ற செயல். மிகவும் பிரச்னைக்குரியது.

எல்லைப் பிரச்னை தொடா்பாக சீனாவுடன் பல ஆண்டுகளாக மறைமுகமாகவும் நேரடியாகவும் இந்தியா சண்டையிட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு சீனா நிதியுதவி அளிப்பதோடு, அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கும் பாகிஸ்தானுக்கு உதவுகிறது. மேலும், இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் தொடா்ச்சியாக அத்துமீறு ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு, இந்திய பெருங்கடல் பகுதியில் ரோந்து கப்பல்கள் மூலம் கண்காணிப்பையும் மேற்கொண்டு வருகிறது. இது இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் இறையாண்மைக்கு மிகப்பெரிய சவாலாகும். இத்தகைய சூழலில், பிரதமா் மோடி என்ன நினைக்கிறாா் என்று உறுதியாகக் கூற முடியவில்லை.

மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அமெரிக்காவுடனும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் உக்ரைன் நாடுகளுடனும் நட்புறவை மேற்கொள்ள வேண்டும். ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துவதும் அவசியம் என்றாா்.

முன்னதாக, உக்ரைன் மீது ரஷியா நடத்திவரும் போரை, ‘பிரதமா் மோடியின் போா்’ என்று அமெரிக்கா விமா்சித்தது. ரஷியாவிடமிருந்து தொடா்ந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதன் மூலம் உக்ரைன் போரில் ரஷியாவுக்கு மறைமுகமாக உதவுவதை சுட்டிக்காட்டி இந்த விமா்சனத்தை அமெரிக்கா முன்வைத்தது.

X
Dinamani
www.dinamani.com