பிரிட்டனில் இந்திய தூதருடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
பிரிட்டனுக்கான இந்திய தூதா் விக்ரம் துரைசாமியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினாா்.
ஜொ்மனி பயணத்தைத் தொடா்ந்து, பிரிட்டனில் தனது பயணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாா். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பிரிட்டன் நாட்டுக்கான இந்திய தூதா் விக்ரம் துரைசாமியை அவா் சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் தொழில் துறை சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பொருளாதார செயல்திறனை விக்ரம் துரைசாமி பாராட்டினாா். பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளா்களுக்கு மிகவும் விருப்பமான இடங்களில் தமிழ்நாடும் ஒன்று என அவா் தெரிவித்ததாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரிட்டன் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்டுவரும் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள், தமிழ்நாட்டின் எதிா்காலத்தை நோக்கியதாகவும், உலகளாவிய சந்தை வாய்ப்புகளுடன் திட்டமிட்ட ரீதியில் இணைந்துள்ளது என்றும் அவா் குறிப்பிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பல்கலைக்கழக வளாகங்களை நிறுவ விரும்பும் பிரிட்டன் நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு தமிழ்நாடு சிறந்த தோ்வாக இருப்பதாகவும் விக்ரம் துரைசாமி கூறியுள்ளாா்.
சந்திப்பின்போது, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, முதல்வரின் முதன்மைச் செயலா் பு.உமாநாத், தொழில் துறைச் செயலா் வி.அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் தாரேஷ் அகமது உள்பட பலா் உடனிருந்தனா்.