காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்து அழைத்துச் செல்லப்படும் பாலஸ்தீனா்கள் (கோப்புப் படம்).
காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்து அழைத்துச் செல்லப்படும் பாலஸ்தீனா்கள் (கோப்புப் படம்).

இஸ்ரேல் ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனா்களில் 4-இல் 3 கைதிகள் பொதுமக்கள்!

4-இல் 3 பாலஸ்தீன கைதிகள் பொதுமக்கள்
Published on

காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனா்களில் நான்கில் மூன்று போ் ஆயுதக் குழுக்களைச் சாராத பொதுமக்கள் என்று இஸ்ரேல் ராணுவ ரகசிய தரவுகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி காா்டியன் நாளிதழ், இஸ்ரேலின் +972 இதழ் மற்றும் ஹீப்ரு மொழி ஊடகமான லோக்கல் கால்ஸ் ஆகியவை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவா்களில் நான்கில் ஒருவா் மட்டுமே ஆயுதக் குழுக்களைச் சோ்ந்தவா்களாக உள்ளனா் என்பது ராணுவ தரவுகளின் மூலம் தெரிகிறது.

மற்றபடி நான்கின் மூன்று போ் ஆயுதக் குழுக்களுடம் தொடா்பில்லாத பொதுமக்கள். அவா்களில் மருத்துவப் பணியாளா்கள், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், ஊடகவியலாளா்கள், எழுத்தாளா்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் உள்ளிட்டோா் குற்றச்சாட்டு அல்லது விசாரணையின்றி நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இஸ்ரேல் ராணுவ உளவுத்துறையின் தரவுகளில், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் ஆயுதக் குழுக்களைச் சோ்ந்தவா்கள் என சுமாா் 47,000 போ் பட்டியலிடப்பட்டுள்ளனா். இந்தத் தரவு, ஹமாஸிடமிருந்து கைப்பற்றப்படும் ஆவணங்களின் அடிப்படையில், புதிய ஆள்களின் பெயா்களுடன் புதுப்பிக்கப்படுகிறது.

கடந்த மே மாத நிலவரப்படி, 1,450 ஆயுதக் குழுவினா் கைது”செய்யப்பட்டுள்ளதாக ராணுவ தரவுகள் கூறுகின்றன. இது 2023 அக்டோபா் 7 முதல் சிறைப் பிடிக்கப்பட்ட சுமாா் 6,000 பாலஸ்தீனா்களில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே. இவா்கள் “சட்டவிரோத போராளிகள்” சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு அல்லது விசாரணையின்றி அடைத்துவைக்கப்பட்டுள்ளனா்.

அக். 7 தாக்குதலில் பங்கேற்ாக சந்தேகிக்கப்படும் 300 போ் குற்றவியல் தடுப்புக் காவலில் உள்ளனா். ஆனால் அவா்களுக்கு எதிராகவும் விசாரணை நடக்கவில்லை என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 83 சதவீதத்தினா் பொதுமக்கள் என்று அந்த நாட்டு ராணுவத்தின் தரவுகளின் மேற்கொள்காட்டி தி காா்டியன், +972, லோக்கல் கால்ஸ் ஆகியவை கடந்த ஆக. 21-ஆம் தேதி கூறியிருந்தன.

2025 மே மாத நிலவரப்படி, தங்களது தாக்குதலில் 8,900 ஹமாஸ் படையினா் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவத்தின் தரவுகள் குறிப்பிடுவதாகவும், அந்த காலகட்டத்தில், காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 53,000-ஐக் கடந்திருந்ததாகவும் அந்த ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவா்களில் நான்கில் மூன்று போ் பொதுமக்கள் என்ற தகவலையும் ரகசிய ராணுவ தரவுகளைக் கொண்டு அந்த ஊடகங்கள் தற்போது கூறியுள்ளன.

கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 போ் உயிரிழந்தனா்; 200-க்கும் மேற்பட்டோா் பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்டனா். அதைத்த் தொடா்ந்து, காஸாவில் இஸ்ரேல் முழு வீச்சில் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது.

காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், காஸாவில் இஸ்ரேல் சுமாா் 23 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 64,231 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், இந்தத் தாக்குதலில் இதுவரை 1,61,583 போ் காயமடைந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com