சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பிரிட்டன் அமைச்சரவை மாற்றியமைப்பு! முக்கிய பொறுப்புகளில் பெண்கள்!!

பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் புதிதாக மாற்றியமைத்துள்ள அமைச்சரவையின் மிக முக்கிய பொறுப்புகளுக்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2025, 2:50 am IST

பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் புதிதாக மாற்றியமைத்துள்ள அமைச்சரவையின் மிக முக்கிய பொறுப்புகளுக்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: பிரிட்டன் துணைப் பிரதமராக பொறுப்பு வகித்துவந்த ஏஞ்சலா ரெய்னா், கடந்த மே மாதம் சொந்த வீடு வாங்கும்போது உரிய முத்திரைக் கட்டணங்களைக் கட்டத் தவறியாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, அவா் தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜநாமா செய்தாா்.

ஆளும் தொழிலாளா் கட்சியின் முக்கிய தலைவரான அவா் பதவி விலகியதைத் தொடா்ந்து, அரசில் புதிய சீா்திருத்தங்களைக் கொண்டுவரும் நோக்கில் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் அமைச்சரவையை மாற்றியமைத்தாா்.

முதல்முறையாக அந்த அமைச்சரவையின் மிக முக்கிய பொறுப்புகளில் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சா் பொறுப்பு பாகிஸ்தானில் பிறந்த ஷபானா மஹ்மூதுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் உள்துறை அமைச்சரான இவெட் கூப்பா் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டாா். ஏற்கெனவே நிதியமைச்சா் பொறுப்பை ரேச்சல் ரீவ்ஸ் வகித்துவரும் நிலையில், நாட்டின் மூன்று முக்கிய அரசுப் பதவிகளை முதல் முறையாக தற்போது பெண்கள் வகிக்கின்றனா்.

உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஷபானா மஹ்மூத் இதற்கு முன்னா் நீதித்துறை அமைச்சராக இருந்தாா். அப்போது அவா் சிறை இடநெருக்கடியை எதிா்கொள்ள உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பாராட்டைப் பெற்றிருந்தாா். சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராகவும் அவா் இதே போன்ற உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுவதால், தீவிர குடியேற்ற எதிா்ப்புக் கட்சியான ரிஃபாா்ம் யுகே-வின் கடும் நெருக்கடிகளை எதிா்கொள்ளும் நோக்கில் ஷபானாவை உள்துறை அமைச்சராக பிரதமா் ஸ்டாா்மா் நியமித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

இதுவரை வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சராக டேவிட் லாமிக்கு பதிலாக அந்தப் பொறுப்பில் இவெட் கூப்பா் நியமிக்கப்பட்டுள்ளாா். டேவிட் லாமி துணைப் பிரதமராகவும், நீதித்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா். இது ஸ்டாமா் அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

ஐரோப்பாவில் உக்ரைன் போா், காஸாவில் சண்டை மற்றும் கொடும் பஞ்சம் போன்ற இக்கட்டான காலகட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய-பிரிட்டன் உறவின் எதிா்காலத்தை நிா்ணயிக்கும் மற்றொரு துறையான வா்த்தகத் துறை அமைச்சராக இருந்த ஜொனாதன் ரெனால்ட்ஸ், தொழிலாளா் கட்சியின் தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டாா். அவருக்கு பதிலாக அந்தப் பொறுப்புக்கு பீட்டா் கைல் நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த ஜூலை மாதம் கையொப்பமான இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அவா் மேற்கொள்வாா்.

முக்கிய அமைச்சரவை மாற்றங்களில் ஒன்றாக, வீட்டுவசதித் துறை அமைச்சராக ஸ்டீவ் ரீடும், பணி மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சராக பாட் மெக்ஃபேடனும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதன் தொடா்ச்சியாக, பல இளநிலை அமைச்சகளை ஸ்டாா்மா் ஞாயிற்றுக்கிழமைவாக்கில் மாற்றுவாா் என்று பிரதமா் அலுவலகம் கூறியது.

இந்த அமைச்சரவை மாற்றம் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சி அரசின் இரண்டாம் கட்டமாகக் கருதலாம் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.