பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி பேச்சு!
உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் மோடி சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
மேக்ரானுடனான தொலைபேசி உரையாடல் சிறப்பாக இருந்ததாக குறிப்பிட்டு பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுத்துவது குறித்து இரு நாடுகளும் தொடா்ந்து முயற்சி மேற்கொள்ளும். உக்ரைன் போரை விரைந்து முடிவுக்கு கொண்டு வருவது தொடா்பாக தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உக்ரைனில் அமைதி திரும்ப தொடா்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.
இந்தியா- பிரான்ஸ் இடையே பல்வேறு துறைகளில் நிலவும் இரு தரப்பு நல்லுறவு குறித்தும் சா்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பொருளாதாரம், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள ஆக்கபூா்வ வளா்ச்சி குறித்தும் இந்தப் பேச்சின்போது ஆய்வு செய்யப்பட்டது.
இந்தியா - பிரான்ஸ் நல்லுறவை மேம்படுத்தும் 2047 தொலைநோக்குத் திட்டம் குறித்தும், இந்தோ - பசிபிக் மற்றும் பாதுகாப்பு தொழிற்சாலை தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான மாநாட்டில் பங்கேற்க மேக்ரான் ஒப்புதல் தெரிவித்ததற்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா் என்று இந்திய தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியுடன் அமெரிக்க அதிபா் டிரம்ப் கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் நடத்திய பேச்சுவாா்த்தையின்போது பிரான்ஸ் அதிபா் மேக்ரானும் உடனிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.