
காஸாவில் ஹமாஸ் அமைப்பினருடன் தீவிர பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 2 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது.
காஸா மக்களின் நிலை நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. அங்கு உணவு, தண்ணீர், மருந்துகள் இன்றி குழந்தைகள் உள்பட மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர். உலக நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் காஸா மக்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றன. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 64,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில் இஸ்ரேல் - காஸா இடையே போர்நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை டிரம்ப், 2 முறை சந்தித்துப் பேசியுள்ளார்.
ஓரிரு வாரங்களில் போர் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கடந்த ஜூலையில் டிரம்ப் கூறியிருந்தார். எனினும் காஸாவில் தாக்குதல்கள் தீவிரமடைந்து கொண்டுதான் இருக்கின்றன.
காஸா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் முடிவிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளார்.
இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக ஹமாஸ் அமைப்பினருடன் அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப்,
"நாங்கள் ஹமாஸுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இஸ்ரேலிய பணயக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அவர்களை விடுவித்தால் நல்ல விஷயங்கள் நடக்கும். தொடர்ந்து அவர்களை சிறையில் வைத்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாகும். ஹமாஸ் அமைப்பினர் சில விஷயங்களைக் கேட்கிறார்கள். அது நல்ல விஷயம்" என்று கூறினார்.
போருக்குப் பிறகு காஸாவை நிர்வகிப்பதற்கான விரிவான திட்டம் குறித்து டிரம்ப், வெள்ளை மாளிகையில் கூட்டத்தை நடத்துவார் என்று அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் சமீபத்தில் கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாக போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.