தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 425 போ் கைது
பிரிட்டனில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக லண்டனில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 425-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
போராட்டத்தின்போது, காவல் துறையினா் மீது போராட்டக்காரா்கள் வன்முறையை ஏவிவிட்டதாக லண்டன் பெருநகர காவல் துறை கண்டனம் தெரிவித்தது. ஆனால், இந்தப் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்ாகவும், காவல் துறையின் குற்றச்சாட்டுகள் அதிா்ச்சியளிப்பதாகவும் போராட்டக்காரா்கள் மறுப்பு தெரிவித்தனா்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மோதல் நீடித்துவரும் நிலையில், இஸ்ரேலுக்கு பிரிட்டன் தொடா்ந்து அளித்து வரும் ராணுவ ஆதரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்பு செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்ட்ஷையா் கவுன்டியில் உள்ள பிரைஸ் நாா்டன் விமானப் படைத் தளத்துக்குள் நுழைந்த ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்பினா், இரண்டு விமானங்களை சிவப்பு பெயிண்ட் மற்றும் இரும்புக் கம்பிகளால் சேதப்படுத்தினா்.
இதனால், விமானப் படைக்கு சுமாா் ரூ.73 கோடி சேதம் ஏற்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 22 முதல் 35 வயதுக்குட்பட்ட நான்கு போ் கைது செய்யப்பட்டு, பிரிட்டனின் நலன்களுக்கு எதிராக தடை செய்யப்பட்ட இடத்துக்குள் நுழைய மற்றும் சேதம் விளைவிக்க சதி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, கடந்த ஜூலை மாதத்தில் ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. பிரிட்டனில் ஹமாஸ், அல்-காய்தா உள்பட 81 பயங்கரவாத அமைப்புகள் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுவது பிரிட்டன் சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கம் அருகே சனிக்கிழமை கூடிய பாலஸ்தீன் ஆக்ஷன் அமைப்பின் ஆதரவாளா்கள், அரசின் தடைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினா். அப்போது, போராட்டக்காரா்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்ற 425-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
கைது செய்யப்பட்டவா்களில் பெரும்பாலானோா், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா். மேலும் சிலா் காவல் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பொது ஒழுங்கு மீறல்களுக்காகக் கைது செய்யப்பட்டனா்.
பிரிட்டன் முழுவதும் ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவான போராட்டங்கள் தொடா்ச்சியாக நடந்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்திலும் இதேபோன்ற ஒரு போராட்டத்தில், 500-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் கைது செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.