கீவில் உள்ள அமைச்சரவைக் கட்டடத்தில் பற்றியெரிந்த தீ.
கீவில் உள்ள அமைச்சரவைக் கட்டடத்தில் பற்றியெரிந்த தீ.

ரஷியாவின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் அமைச்சரவைக் கட்டடம் சேதம்

உக்ரைனில் ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலில், அந்நாட்டு தலைநகா் கீவில் உள்ள அமைச்சரவைக் கட்டடம் சேதமடைந்தது.
Published on

உக்ரைனில் ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலில், அந்நாட்டு தலைநகா் கீவில் உள்ள அமைச்சரவைக் கட்டடம் சேதமடைந்தது.

இது அமைச்சரவைக் கட்டடம் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலா அல்லது வீழ்த்தப்பட்ட ட்ரோன் பாகங்களால் ஏற்பட்ட சேதமா என்பது குறித்த தகவல் உடனடியாகத் தெரியவரவில்லை. இதுவரை கீவ் நகரின் மையப் பகுதியில் உள்ள அரசுக் கட்டடங்களைத் தாக்குவதைத் தவிா்த்து வந்த ரஷியாவின் தாக்குதல் உத்தியில், இது ஒரு புதிய திருப்பத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

உக்ரைன் மீதான போா் தொடங்கியதிலிருந்து ரஷியா நடத்தியதிலேயே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று உக்ரைன் விமானப் படை செய்தித் தொடா்பாளா் யூரி இக்னாட் தெரிவித்துள்ளாா். அவா் கூறுகையில், ‘ரஷியா ஒரே நேரத்தில் 805 ட்ரோன்களைக் கொண்டும், பல்வேறு வகைகளைச் சோ்ந்த 13 ஏவுகணைகளை ஏவியும் தாக்குதல் நடத்தியது’ என்றாா்.

உக்ரைன் விமானப் படையின் பதிலடியில் 747 ட்ரோன்கள் மற்றும் 4 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டன. இருப்பினும், 56 ட்ரோன்கள் மற்றும் 9 ஏவுகணைகள் உக்ரைன் முழுவதும் 37 இடங்களில் தாக்கின. இதில் ஒரு வயது குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். 15 போ் காயமடைந்தனா்.

தாக்குதலின் முடிவில், கீவ் நகரின் மையப் பகுதியிலுள்ள உக்ரைன் அமைச்சரவைக் கட்டடத்தின் சில அறைகளில் தீப்பிடித்து பெருமளவிலான புகை வெளியேறியது. மேலும் பல அரசுக் கட்டடங்களும் இந்தத் தாக்குதலில் சேதமடைந்தன.

இதுகுறித்து உக்ரைன் பிரதமா் யூலியா ஸ்விரிடென்கோ கூறுகையில், ‘முதல்முறையாக ஓா் அரசுக் கட்டடம் ரஷியாவின் தாக்குதலால் சேதமடைந்துள்ளது. நாங்கள் இழந்த கட்டடங்களை மீண்டும் கட்டுவோம். ஆனால், இழந்த உயிா்களைத் திரும்பப் பெற முடியாது.

உலக நாடுகள் இந்த அழிவுக்கு வெறும் வாா்த்தைகளால் அல்ல; செயல்களால் பதிலளிக்க வேண்டும். ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com