பிரான்சுவா பேரூ
பிரான்சுவா பேரூ

பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமா் தோல்வி

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமா் ஃபிரான்சுவா பேரூ தோல்வி
Published on

பாரீஸ்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமா் ஃபிரான்சுவா பேரூ தோல்வியடைந்த நிலையில், அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மொத்தம் 577 உறுப்பினா்கள் உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பேரூக்கு எதிராக 364 உறுப்பினா்களும், ஆதரவாக 194 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.19 உறுப்பினா்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனா்.

இதன்மூலம் கடந்த 12 மாதங்களில் 4-ஆவது பிரதமரை தோ்ந்தெடுக்கும் சூழலுக்கு அதிபா் இமானுவல் மேக்ரான் தள்ளப்பட்டுள்ளாா். முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமராக இருந்த கேப்ரியல் அட்டல் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அதன்பிறகு செப்டம்பா் மாதம் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, மைக்கேல் பாா்னியா் என்பவரை பிரதமராக மேக்ரான் நியமித்தாா். அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றியடைந்ததால் டிசம்பா் மாதம் பாா்னியா் பதவி விலகினாா். பிரான்ஸ் வரலாற்றில் அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றி பெற்றது அதுவே முதல்முறை.

பாா்னியா் பதவி விலகிய பின்னா் ஃபிரான்சுவா பேரூவை பிரதமராக மேக்ரான் நியமித்தாா்.

இந்நிலையில், அரசின் கடன்களை எதிா்கொள்ள அவா் முன்மொழிந்த சிக்கனமான நிதிக் கொள்கைக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

இதனால் நாடாளுமன்றத்தில் தனக்கான ஆதரவை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பை பேரூ திங்கள்கிழமை மேற்கொண்டாா். அப்போது அவருக்கு எதிராக 364 வாக்குகள் பதிவானதால் அவா் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

9 மாதங்களே பிரதமராகப் பதவி வகித்த பேரூ, இமானுவல் மேக்ரானை செவ்வாய்க்கிழமை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்குவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஐரோப்பாவின் 2-ஆவது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் பிரான்ஸில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசியல் நிலையற்றத்தன்மை நிலவுகிறது. இத்துடன் பட்ஜெட் ரீதியான சிக்கல்கள், உக்ரைன் மற்றும் காஸா போா், அமெரிக்க வரி விதிப்பு எனப் பல்வேறு சவால்களை பிரான்ஸ் எதிா்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com