
நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அறிவுறுத்தியுள்ளது.
நேபாளத்தில் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக இளைஞர்கள் திங்கள்கிழமை நடத்திய போராட்டத்தைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனா். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா்.
இதையடுத்து, நாடு முழுவதும் நிலவிவரும் பதற்றமான சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்துக்கு பிரதமர் கே.பி.சர்மா ஓலி தலைமையிலான அரசு உத்தரவிட்டது.
போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சரான ரமேஷ் லேக்கக் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இளைஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக நேபாள அரசு அறிவித்தது. அதனால் அரசுக்கு ஒத்துழைப்பு தந்து இளைஞர்கள் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் நேபாள நிலைமை குறித்து இந்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், "நேபாளத்தில் நேற்று முதல் நடைபெற்று வரும் சம்பவங்களை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இளைஞர்கள் உயிரிழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் துணை நிற்கிறோம். காயமடைந்தவர்களுக்கும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் நிதானத்தைக் கடைப்பிடித்து அமைதியான வழிமுறைகள், கலந்துரையாடல் மூலம் பிரச்னையை சரிசெய்வார்கள் என்று நம்புகிறோம். காத்மண்டு மற்றும் நேபாளத்தின் பல நகரங்களில் அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளதையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் நேபாள அதிகாரிகளின் நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.