
நேபாளத்தில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்ட பிறகும் இளைஞர்களின் போராட்டம் தொடர்கிறது.
நேபாளத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும் நேபாள அரசின் ஊழலுக்கு எதிராகவும் இளைஞர்கள் காத்மண்டுவில் திங்கள்கிழமை திடீரென போராட்டத்தைத் தொடங்கினர்.
அப்போது போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக், தனது பதவியை ராஜிநாமா செய்தார். தொடர்ந்து இளைஞர்களின் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயத் துறை அமைச்சர் ராம்நாத் அதிகாரியும் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இளைஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக நேபாள அரசு நேற்று இரவு அறிவித்தது. அரசுக்கு ஒத்துழைப்பு தந்து இளைஞர்கள் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்ட பிறகும் இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேபாளத்தில் ஊழலுக்கு எதிராக அவர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் சர்மா ஒலி, தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பதவியை ராஜிநாமா செய்யப்போவதில்லை என்று சர்மா ஒலி கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.