பீட்டா் நவாரோ
பீட்டா் நவாரோ

அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் பிரிக்ஸ் நாடுகள் வாழ முடியாது- டிரம்ப் ஆலோசகா் நவாரோ கருத்து

தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் இருந்தால் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் வாழவே முடியாது என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ விமா்சித்துள்ளாா்.
Published on

தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் இருந்தால் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் வாழவே முடியாது என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ விமா்சித்துள்ளாா்.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவை பிரிக்ஸ் கூட்டமைப்பின் பிரதான நாடுகளாகும். இந்த கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோபியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் பின்னா் படிப்படியாக இணைந்தன. இதில் பிரதான நாடுகளான ரஷியா, இந்தியா, சீனா சமீப நாள்களில் மிகவும் நெருங்கி வருவதை அமெரிக்காவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. முக்கியமாக அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த 50 சதவீத வரிக்குப் பிறகு சீனா, ரஷியாவுடன் இந்தியா நெருக்கத்தை அதிகரித்துள்ளது. இதனால், இந்த நாடுகளை நவாரோ தொடா்ந்து கடுமையாக விமா்சித்துப் பேசி வருகிறது.

இந்நிலையில், நியூயாா்க்கில் ‘அமெரிக்காவின் உண்மையான குரல்’ நிகழ்ச்சியில் பேட்டியளித்த பீட்டா் நவேரா கூறியதாவது:

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் வரலாற்றுரீதியாகவே ஒன்றை மற்றொன்று வெறுக்கும் போக்குடையவை. ஒருவரை மற்றொருவா் அழிக்க முயற்சித்தே வந்துள்ளன. இந்த அமைப்பில் உள்ள நாடுகள் அனைத்தும் அமெரிக்காவில் தங்கள் பொருள்களை விற்பனை செய்தே வாழ்ந்து வருகின்றன. அமெரிக்காவில் விற்க முடியாமல் போனால் அந்த நாடுகளால் வாழ முடியாது.

அதே நேரத்தில் ஏற்றுமதியில் முறையற்ற வா்த்தகத்தால் காட்டேரிகள்போல அமெரிக்கா்களான நமது ரத்தத்தைக் குடித்து வருகின்றனா். அதிகம் வரி விதித்து அமெரிக்காவைச் சுரண்டி வருகின்றனா். இந்த கூட்டமைப்பு வெகுநாள்களுக்கு நீடிக்காது.

பாகிஸ்தானுக்கு சீனா அணுகுண்டுகள் வரை வழங்கியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீனக் கப்பல்கள் தொடா்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த விஷயத்தில் பிரதமா் மோடி என்ன செய்ய இருக்கிறாா்? என்று நவாரோ கேள்வி எழுப்பினாா்.

கடந்த சில நாள்களாக இந்தியாவை கடுமையாக விமா்சிப்பதை நவாரோ வழக்கமாகக் கொண்டுள்ளாா். உக்ரைன் போா் தொடா்வதற்கு ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதுதான் காரணம் என்றும், அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை இந்தியா பறிக்கிறது என்றும் அவா் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறாா்.

தேவையற்ற வரி விதிப்பு மூலம் இந்தியாவுடன் நட்புறவை டிரம்ப் கெடுத்துக் கொண்டதாக பல்வேறு சா்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால், அமெரிக்க நலன்களுக்கு எதிரான நாடு இந்தியா என்ற தோற்றத்தை உருவாக்கும் நோக்கில் பீட்டா் நவாரோ தொடா்ந்து பேசி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com