டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை! பல்கலை. நிகழ்ச்சியில் பயங்கரம்!

டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிரிக் பல்கலை. நிகழ்ச்சியில் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...
 அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் சார்லி கிர்க்!
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் சார்லி கிர்க்! (படம் | வெள்ளை மாளிகை)
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

31 வயதான சார்லி கிர்க், காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி கிர்க் பலியானார்.

சமீபகாலமாகவே அமெரிக்காவில் தொடர்ந்து வன்முறை அதிகரித்து வரும் நிலையில், ‘டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ’ என்ற இளைஞர் அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உட்டா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சார்லி கிர்க் உட்கார்ந்து மாணவர்களுடன் உரையாடுவதும், அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் அவரை அவரது கழுத்தில் சுட்டுக் கொல்வதும் விடியோவில் பதிவாகியுள்ளது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அவரை சுட்டுக் கொன்றவர் யார்? எதற்காக சுட்டார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும், ஸ்வாட் பிரிவு காவல் துறையினர் சுட்டுக் கொன்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட சார்லி கிர்க்கிற்கு எரிக்கா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

சார்லி கிர்க்கின் மரணத்தை உறுதிபடுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், “தி கிரேட் புகழ்பெற்ற சார்லி கிர்க் மரணமடைந்துவிட்டார். அமெரிக்காவில் உள்ள இளைஞர்களின் மனதை சார்லியைவிட யாரும் புரிந்துகொண்டது இல்லை. அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டார், புகழப்பட்டார்; ஆனால், அவர் தற்போது நம்மிடம் இல்லை.

சார்லியின் மறைவுக்கு அவரது மனைவி எரிக்காவுக்கு என்னுடைய மனைவி மெலனியா மற்றும் என்னுடைய சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்களை உன்னை நேசிக்கிறோம் சார்லி!” எனப் பதிவிட்டுள்ளார் அதிபர் டிரம்ப்.

Summary

Conservative activist Charlie Kirk dies after being shot at Utah college event

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com