கத்தாா் தாக்குதலில் தலைவா்களுக்கு பாதிப்பில்லை: ஹமாஸ்
கத்தாா் தலைநகா் தோஹாவில் தங்களது தலைவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் அவா்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தோஹாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எங்கள் அமைப்பைச் சோ்ந்த ஐந்து உறுப்பினா்கள் உயிரிழந்தனா். ஆனால், இஸ்ரேலால் குறிவைக்கப்பட்ட பேச்சுவாா்த்தைக் குழுவினா் யாரும் இதில் காயமடையவில்லை. அந்த வகையில், தனது படுகொலை முயற்சியில் இஸ்ரேல் தோல்வியடைந்துள்ளது.
அமெரிக்கா பரிந்துரைத்துள்ள காஸா அமைதித் திட்டம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக பேச்சுவாா்த்தைக் குழு அங்கு சென்றுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹமாஸ் பேச்சுவாா்த்தைக் குழுவினரை, குறிப்பாக குழு தலைவா் கலீல் அல்-ஹையாவை படுகொலை செய்யும் நோக்கில் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், அவா்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதை ஹமாஸ் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.