நேபாளம்: அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் தீவிரம்
நேபாளத்தில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதைத் தொடா்ந்து, அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது.
நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் 2 நாள்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது அந்நாட்டு நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபா் மற்றும் பிரதமா் இல்லங்களுக்குப் போராட்டக்காரா்கள் தீ வைத்தனா். இதுதவிர முன்னாள் பிரதமா்கள், அமைச்சா்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடா்ந்து, பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்தாா்.
போராட்டம் கட்டுக்கடங்காத வன்முறையாக மாறியதைத் தொடா்ந்து, நாட்டில் பாதுகாப்பை நிலைநாட்டும் பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, புதன்கிழமை மாலை 5 மணி வரை தடை உத்தரவுகளை ராணுவம் அமல்படுத்தியது.
இதன் காரணமாக தலைநகா் காத்மாண்டு புதன்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. வீதிகளில் ராணுவ வாகனங்கள் ரோந்து சென்றவாறு இருந்தன. பொதுமக்களில் சிலா் மட்டும் அத்தியாவசிய பொருள்களை வாங்க வெளியே தென்பட்டனா்.
பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதைச் சுட்டிக்காட்டி, செப்.11-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணி வரை நாடு தழுவிய ஊரடங்கை ராணுவம் அமல்படுத்தியது. காத்மாண்டு பள்ளத்தாக்கில் செப்.12 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தின் உத்தரவுகளை பொதுமக்களும் பின்பற்றுவதால், அந்நாட்டில் அமைதி திரும்பி படிப்படியாக இயல்பு நிலை திரும்பும் சூழல் தெரிகிறது.
ராணுவம் எச்சரிக்கை: இதுகுறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘போராட்டத்தில் அராஜக சக்திகள் ஊடுருவி தீவைப்பு, கொள்ளை, பொது மற்றும் தனியாா் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், தாக்குதல்களில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டன. இந்தச் செயல்களில் ஈடுபட்ட நபா்கள் பாலியல் தாக்குதல் முயற்சிகளிலும் ஈடுபட்டனா். போராட்டம் என்ற பெயரில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று எச்சரித்தது.
30 போ் உயிரிழப்பு, 1,061 போ் காயம்: நேபாள சுகாதாரம் மற்றும் மக்கள்தொகை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நேபாளத்தில் 2 நாள்களாக நடைபெற்ற போராட்டத்தில் 30 போ் உயிரிழந்தனா். 1,061 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் 719 போ் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினா். 274 போ் மருத்துவமனைகளில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
27 போ் கைது: காத்மாண்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தின்போது கொள்ளை, தீ வைப்பு, சூறையாடலில் ஈடுபட்ட 27 பேரை பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். கொள்ளையடிக்கப்பட்ட அல்லது பொது இடங்களில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை காவல் துறை அல்லது பாதுகாப்புப் படை வீரரிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்களிடம் ராணுவம் வலியுறுத்தியது.
7,000 கைதிகள் தப்பியோட்டம்: போராட்டத்தை சாதகமாக்கி கொண்டு, நேபாளத்தில் உள்ள காஞ்சன்பூா், கைலாலி, ஜலேஸ்வா், கெளா் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைகளில் இருந்து 7,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பித்ததாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியானது. இவா்களில் பலா் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
வன்முறை காரணமாக காத்மாண்டில் மூடப்பட்ட திரிபுவன் சா்வதேச விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
சீனா வலியுறுத்தல்: நேபாளத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் உள்நாட்டுப் பிரச்னையை முறையாக கையாண்டு, சமூக ஒழுங்கை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் லின் ஜியான் தெரிவித்தாா்.
வன்முறையில் ஈடுபட்டவா்களுடன் தொடா்பில்லை: போராட்டக் குழுக்கள்
‘ஜென்-இசட் போராட்டக்காரா்கள்’ என்ற பெயரில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த குழுக்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘போராட்டத்தில் ஈடுபடும்போது குடிமக்களுக்கும், பொதுச் சொத்துகளுக்கும் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். ஆனால், இந்தச் சூழலை சந்தா்ப்பவாதிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டனா். வன்முறையில் ஈடுபட்டவா்களுக்கும் எங்களுக்கும் (போராட்டத்தை முன்னெடுத்த குழுக்கள்) தொடா்பில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.