
நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்திருந்த சிங்கா அரண்மனை எனப்படும் அரசு மாளிகை, ஜென் ஸி இளைஞர்களின் கலவரத்தில், தீக்கிரையானது.
ஆசியாவின் மிகப்பெரிய அரண்மனையை காவுவாங்கிவிட்டு, அதுபற்றி எரியும் பின்னணியில், இளைஞர்கள் பலரும் செல்ஃபி எடுக்கும் புகைப்படங்கள், இளம் தலைமுறையினரின் அறியாமையை அப்பட்டமாகக் காட்டுகிறது.
அனைத்து அரசு ஆவணங்கள், பொக்கிஷமாக பராமரிக்கப்பட்டு வந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணங்கள், பொருள்கள், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகக் கோப்புகள் என அனைத்தும் எந்தப் பாகுபாடும் இன்றி தீக்கு இரையாகிவிட்டது. இப்போது நிற்பது சுட்ட செங்கல்லால் ஆன சுவர் மட்டுமே.
1903ஆம் ஆண்டு பிரதமர் இல்லமாக அங்கீகரிக்கப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய மாளிகை என்று பெருமைபெற்ற இந்த சிங்கா மாளிகை, இன்று எலும்புக்கூடாக, நேபாள இளைஞர்களின் கோபத்துக்கான சாட்சியாக நிற்கிறது. இந்த மாளிகையில் 1700 அறைகள் இருந்தனவாம்.
ஆளுங்கட்சிகளுக்கு எதிராக அதுவும், இந்தியாவின் அண்டை நாடுகளில், ஆளுங்கட்சிக்கு எதிரான கலவரங்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து வருகிறது. இலங்கை, வங்கதேசத்தைத் தொடர்ந்து தற்போது நேபாளத்திலும் கலவரம் வெடித்திருக்கிறது.
கலவரத்தைத் தொடர்ந்து நேபாள பிரதமர் சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம், பிரதமர் இல்லம், அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த தீயில் கருகிப் போனது, ஒட்டுமொத்த நேபாள நாட்டின் ஆட்சிக்குமான ஆணிவேராக இருந்த சிங்கா மாளிகை. இது வெறும் கட்டடம் மட்டுமல்ல, நேபாளத்தின் ஆட்சி இங்கிருந்துதான் இயங்கி வந்தது. இந்த சிங்கா மாளிகை வளாகத்துக்குள்தான் நேபாள நாட்டின் நாடாளுமன்ற இரு அவைகளும் இருந்தன.
இங்கு பிரதமர் அலுவலகம் மட்டுமல்லாமல், 20 அமைச்சகங்களின் அலுவலகங்களும், நேபாள வானொலி அலுவலகம், நேபாள தொலைக்காட்சி அலுவலகமும் இயங்கி வந்தது. அதன்படி பார்த்தால், இதுதான் நேபாளத்தின் மூளை.
சுமார் 4 பிரிவுகளாகப் பிரிந்து வானுயர எழுந்த கட்டடங்களுடன், பாரம்பரிய கட்டடக் கலையுடன் அமைந்திருந்த சிங்கா மாளிகை, கடந்த 1973ஆம் ஆண்டு மிகப்பெரிய தீ விபத்தில் சிக்கியது. அதற்கு முன்புவரை, அந்த கட்டடத்தில் 8 கூட்ட அரங்குகள், 1700 அறைகள் இடம்பெற்றிருந்ததாம். வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள், விலை உயர்ந்த மின் விளக்குகளால் அரண்மனை போல ஜொலிக்குமாம் இந்த கட்டடம்.
ஆனால், தீ விபத்தின்போது, சிங்கா தர்பாரின் நான்கில் மூன்று பங்கு கட்டடம் நாசமானது. பிறகு மீண்டும் அதே பொலிவுடன் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதன்பிறகு, 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்தால் சிங்கா மாளிகை மிக மோசமான சேதத்தை அடைந்தது.
இந்த பேரிடர்களை எல்லாம் தாண்டி சிங்கம் போல நின்ற சிங்கா மாளிகை, தற்போது 2025ஆம் ஆண்டு நேபாள நாட்டு இளைஞர்களால் தீ வைக்கப்பட்டு, வெறும் கட்டட எலும்பாக மாறி நிற்கிறது. ஜென் ஸி இளைஞர்களின் கோபத்துக்குக் கொடுக்கப்பட்ட விலையாக மாறியிருக்கிறது சிங்கா மாளிகை.
புரட்சியோ, போராட்டமோ எதுவாக இருந்தாலும், இளைஞர்கள் தங்கள் நாட்டின் சொத்தை அழிப்பதும், ஒரு மனிதனின் வாழ்நாள் உழைப்பாக இருக்கும் தனி நபர்களின் சொத்துகளை சேதப்படுத்துவதும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாததே.
இப்படி தங்கள் நாட்டின் மூளையையே இளைஞர்கள் தீயிட்டுக் கொளுத்தியிருப்பது, வன்முறையாளர்கள் வரன்முறையின்றி செயல்பட்டிருப்பதையே காட்டுகிறது. முன்னேற்றம் வேண்டும், பொருளாதாரம் உயர வேண்டும், ஊழல் ஒழிய வேண்டும் என்றால், கட்டடங்களை தீக்கிரையாக்கினால் நடந்துவிடுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.