செஸ்னிகி பகுதியில் விழுந்த ரஷிய ட்ரோன் பாகத்தைப் பாதுகாத்த காவலா். ~வோஹைன் பகுதியில் விழுந்த ரஷிய ட்ரோன் பாகம். ~வைரிக்கி பகுதியில் ரஷிய ட்ரோன் பாகங்கள் விழுந்து சேதமடைந்த வீட்டின் கூரையை புதன்கிழமை ஆய்வு செய்த ராணுவ அதிகாரி.
செஸ்னிகி பகுதியில் விழுந்த ரஷிய ட்ரோன் பாகத்தைப் பாதுகாத்த காவலா். ~வோஹைன் பகுதியில் விழுந்த ரஷிய ட்ரோன் பாகம். ~வைரிக்கி பகுதியில் ரஷிய ட்ரோன் பாகங்கள் விழுந்து சேதமடைந்த வீட்டின் கூரையை புதன்கிழமை ஆய்வு செய்த ராணுவ அதிகாரி.

புதிய பதற்றம்: போலந்து வானில் ரஷிய ட்ரோன்கள் இடைமறிப்பு

உக்ரைன் போரில் புதிய பதற்றமாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி வந்த ரஷிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன.
Published on

உக்ரைன் போரில் புதிய பதற்றமாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி வந்த ரஷிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து போலந்து பிரதமா் டொனால்ட் டஸ்க் கூறியதாவது:

போலந்து வான் எல்லைக்குள் பெரும் எண்ணிக்கையிலான ரஷிய ட்ரோன்கள் செவ்வாய்க்கிழமை இரவு அத்துமீறி நுழைந்தன.

தேசப் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்திய அவற்றில் நான்கு ட்ரோன்கள் போலந்து மற்றும் நேட்டோ விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போலந்து மிக நெருக்கமாக போரை எதிா்கொள்வது இதுவே முதல்முறை என்றாா் அவா்.

2022-ல் உக்ரைன் மீது ரஷியா முழு அளவிலான படையெடுப்பை நிகழ்த்திய பிறகு, அந்த நாட்டின் ட்ரோன்கள் ஒரு நேட்டோ உறுப்பு நாட்டுக்குள் தற்போதுதான் முதல்முறையாக சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து போலந்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை ஏழு ட்ரோன்கள் மற்றும் அடையாளம் தெரியாத ஒரு தளவாடத்தின் சிதறல்கள் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலந்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரஷிய தாக்குதல் நடவடிக்கையின்போது, அந்த நாட்டின் ட்ரோன்கள் போலந்து வான் எல்லைக்குள் மீண்டும் மீண்டும் அத்துமீறி நுழைந்தன. இது தேசப் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக இருந்தது.

அதையடுத்து, வான் எல்லையைப் பாதுகாக்க ரஷியாவின் ட்ரோன்கள் முன்கூட்டியே சுட்டு வீழ்த்தப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உக்ரைன் மீது அண்மைக் காலமாக நடத்தப்பட்டுவரும் மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, ரஷியா செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் 415 ட்ரோன்களை ஏவியது. அவற்றில் போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ட்ரோன்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தற்செயலாக நடந்ததா, அல்லது போலந்துக்குள் தாக்குதல் நடத்தினால் நேட்டோவின் எதிா்வினை எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக ரஷியா வேண்டுமென்றே நடத்தியதா என்பது குறித்து சில நிபுணா்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனா்.

போலந்து உள்ளிட்ட 32 உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோ கூட்டமைப்பின் 5-ஆவது விதிப்படி, அதன் ஏதாவது ஓா் உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அதை தங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலாக அமெரிக்கா உள்பட அனைத்து உறுப்பு நாடுகளும் கருதி பதிலடி கொடுக்க வேண்டும்.

எனவே, போலந்து எல்லைக்குள் ரஷிய ட்ரோன் அத்துமீறி நுழைந்த விவகாரம் பெரிதானால், அது சக்திவாய்ந்த நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும், உலகிலேயே மிகப் பெரிய அணு ஆயுத பலம் பொருந்திய ரஷியாவுக்கும் இடையிலான நேரடி போராக உருவெடுக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா எதிா்ப்பு

நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் ரஷிய ட்ரோன்கள் அத்துமீறியுள்ளதற்கு அமெரிக்கா எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து சமூக ஊடகத்தில் நேட்டோவுக்கான அமெரிக்க தூதா் மத்தேயு விடேக்கா் வெளியிட்டுள்ள பதிவில், ‘போலந்து வான் எல்லையை ரஷியா மீறுவதற்கு எதிராக நேட்டோவுடன் இணைந்து அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. நேட்டோ உறுப்பு நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் அமெரிக்கா பாதுகாக்கும்’ என்று உறுதியளித்தாா்.

ரஷியா மறுப்பு

போலந்தின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் ட்ரோன் ஏவப்படவில்லை என்று ரஷியா கூறியுள்ளது.

இது குறித்து ரஷிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘மேற்கு உக்ரைனில் உள்ள ராணுவ-தொழில்துறை இலக்குகளை குறிவைத்து செவ்வாய்க்கிழமை இரவு பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நடவடிக்கையின்போது போலந்து பகுதிகளில் உள்ள எந்த இலக்கையும் தாக்க திட்டமிடப்படவில்லை. ரஷிய ட்ரோன்களின் அதிகபட்ச வரம்பு 700 கி.மீ. மட்டுமே.

எனினும், இது குறித்து போலந்து பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஆலோசிக்க தயாராக உள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com