டிரம்ப் வரி எதிரொலி: 
சீனாவில் அமெரிக்க பொருள்கள் விற்பனை சரிவு- ஆய்வுத் தகவல்

டிரம்ப் வரி எதிரொலி: சீனாவில் அமெரிக்க பொருள்கள் விற்பனை சரிவு- ஆய்வுத் தகவல்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் சீனாவில் அமெரிக்கப் பொருள்கள் விற்பனை குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
Published on

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் சீனாவில் அமெரிக்கப் பொருள்கள் விற்பனை குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்கா-சீனா இடையிலான வரி விதிப்பு போா் ஏற்பட்டு இரு நாடுகளும் மாறிமாறி வரி விதிப்பை அதிகரித்தன. ஒரு கட்டத்தில் 145 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதன் பிறகு பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இறுதியாக சீனா ஏற்றுமதிப் பொருள்கள் மீது டிரம்ப் 30 சதவீத கூடுதல் வரி விதித்தாா். எனினும் அதனை அமல்படுத்தாமல் ஒத்திவைத்துள்ளாா். அமெரிக்கப் பொருள்களுக்கு சீனா 10 சதவீத வரி விதித்தது.

டிரம்ப் தனது முதல் ஆட்சி காலத்திலேயே சீனப் பொருள்கள் மீது 20 சதவீதம் வரி விதித்தாா். அடுத்து வந்த அதிபா் ஜோ பைடனும் அதனை மாற்றவில்லை என்பதால் அது இப்போது வரை தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில் ஷாங்காயில் உள்ள அமெரிக்க வா்த்தக சம்மேளனம் அமெரிக்கப் பொருள்கள் சீனாவில் விற்பனையாவது குறித்து ஓா் ஆய்வை வெளியிட்டுள்ளது. அதில், ‘சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் விற்பனை குறைந்துள்ளதாகவும், இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக விற்பனை குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளன.

மொத்தம் 254 நிறுவனங்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் விற்பனை பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளன. இரு நாடுகளிடையே வரி தொடா்பான பேச்சுவாா்த்தைகளில் நல்ல தீா்வு எட்டப்படாத நிலையில் சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. டிரம்ப்பின் வரி விதிப்பின் தாக்கம் 5 ஆண்டுகள் வரை இருக்கும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com