
19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது 79-ஆவது வயதில் நீதி கிடைத்ததை பெண் சமூகம் கொண்டாடி வருகிறது.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பதிவானதொரு பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்மணியொருவர், இப்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார்..! காரணம், அந்தப் பெண் மீது குற்றமில்லை, அவர் நிரபராதி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென் கொரியாவில் கடந்த 1964-இல், தன்னை வலுக்காட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை இழைத்த இளைஞன் ஒருவனிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள முற்பட்ட இளம்பெண் ஒருவர், அந்த இளைஞரை தாக்கி காயப்படுத்தியதற்காக இளம்பெண்ணுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதுவே, அந்தப் பெண்மணி மீதான முக்கிய குற்றச்சாட்டு.
தென் கொரியாவைச் சேர்ந்த சோய் மல்-ஜாவுக்கு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் 19 வயது. தென் கொரியாவின் தெற்குப் பகுதியிலுள்ள ஜிம்ஹே என்னும் சிறு நகரில் வசித்து அவரை, சம்பவ நாளன்று 21 வயது இளைஞர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
சம்பவத்தன்று, அந்த இளம்பெண்ணுக்கு அந்த நபர் செய்த கொடூரத்தின் தீவிரத்தன்மையை சொற்களால் விவரித்து மாளாது. ஆம்... இளம்பெண்ணை தரையில் கிடத்தி, அவரை வாயோடு வாய் வைத்து முத்தமிட்டதுடன், தமது நாக்கை அவர் வாய்க்குள் திணித்து அந்தப் பெண்மணி மூச்சுமுட்டும் அளவுக்குச் சிரமப்படுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் தன்னால் சுத்தமாக மூச்சுவிடக்கூட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதை உணர்ந்த பெண், வேறு வழியின்றி அந்த இளைஞரின் நாக்கை தமது பற்களால் கடித்து துண்டித்துள்ளார். அதில், அந்த இளைஞரின் நாக்கு சுமார் ஒன்றரை செ.மீ., அளவுக்கு துண்டிக்கப்பட்டது.
இதனால் வலியால் துடித்த இளைஞரைத் தள்ளிவிட்டு, அதன்பின் அந்த பெண் தப்பி உயிர் பிழைத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு கடந்த 1965-இல் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு வெறும் 6 மாத சிறைத்தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டதாம்.
இன்னொருபுறம், தன்னை துன்புறுத்திய அந்த இளைஞரின் நாவைக் கடித்து துண்டித்த பெண்மணிக்கோ 10 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சோய் தமக்கு நியாயம் கிடைக்கக் கோரி தென் கொரிய நீதிவியல் துறைக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். ஆனால் அவை பலன்ளிக்காமல் போயின.
இதனிடையே, உலகளவில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்கள் கடந்த 2017-இல் ‘மீ டூ’ இயக்கம் என்னும் பெயரில் பொதுவெளியில் பேசத் தொடங்கிய நிலையில், அதன் வெளிப்படாய், சோய் கடந்த 2020-இல் இந்தத் தீர்ப்பை மேல்முறையீடு செய்யுமாறு கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். எனினும் அந்த மனு ஏற்றுக்கொள்ளபடவில்லை.
இந்த நிலையில், அவரது தொடர் முயற்சியால் கடந்தாண்டு தென் கொரியாவின் உச்ச நீதிமன்றத்தில் அவரது மேல்முறையீட்டு தொடர்பான கோரிக்கை ஏற்கப்பட்டதுடன், மறு விசாரணைக்கு இந்த வழக்கு உட்படுத்தப்பட்டது. உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், பூசன் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற மறுவிசாரணையில் புதன்கிழமை(செப். 10) தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில், இப்போது 79 வயதைக் கடந்துவிட்ட சோய் ஒரு நிரபராதி என்றும், அவர் செய்த செயலானது தென் கொரிய சட்டத்தின்கீழ், ‘சட்டத்தை மீறாத விதத்திலான தற்காப்பு நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 60 ஆண்டு சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக இத்தீர்ப்பை வரவேற்று கொண்டாடிய சோயின் ஆதரவாளர்கள், சோய்க்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.
சோய் தரப்பில் வாதிடும் வழக்குரைஞர்கள் பேசும்போது, 60 ஆண்டுகளுக்கு முன் அவர் அனுபவித்த சித்திரவதைக்கு அரசிடமிருந்து உரிய இழப்பீடு பெற திட்டமிட்டிருக்கிறோம் என்கின்றனர்.
அதெல்லாம் சரி, தீர்ப்பு குறித்து சோய் என்ன சொல்கிறார்? - “61 ஆண்டுகளுக்கு முன்னர், அந்த இக்கட்டான சூழலில் எனக்கு அப்போது ஒன்றுமே புரியவில்லை. பாதிக்கப்பட்ட என் மீதும் குற்றம்சுமத்தப்பட்டது. நானொரு கிரிமினல் குற்றவாளியாக கருதப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு எனது விதி மாற்றப்பட்டுமிருந்தது.
இந்தச் சூழலில், என்னைப் போன்ற பாதிக்கப்பட்டவர்கள், இனிமேலாவது அவர்களும் நீதி கிடைக்கப் போராட நான் ஒரு நம்பிக்கை ஊற்றாக அவர்களுக்கு இருக்க விருப்பப்படுகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.