
நேபாளத்தில் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிராக நடந்த கலவரத்திலிருந்து தப்பி, அந்நாட்டு அமைச்சர்களும் குடும்பத்தினரும் ராணுவ ஹெலிகாப்டர்களில் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், ஒரு அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர், ஹெலிகாப்டரில் ஏறுவதற்குள் போராட்டக்காரர்களால் அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில், நூலிழையில், ஹெலிகாப்டரின் கயிறைப் பிடித்துக் கொண்டு நேபாளத்திலிருந்து தப்பிய காட்சிகள் வெளியாகியிருக்கிறது.
அவர்களைத் தாக்க ஓடி வந்த போராட்டக்காரர்கள் தரையிலிருந்து பார்த்தபடி நிற்கு ஒரு குடும்பத்தினர் கயிறைப் பிடித்தபடி ஹெலிகாப்டரில் தொங்கிக் கொண்டு செல்கிறார்கள்.
காத்மாண்டுவில் ஏற்பட்ட போராட்டத்தின் காரணமாக, நேபாள பிரதமர் சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. நாட்டில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேபாள நாட்டில், ஆளுங்கட்சியினரின் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் 2 நாள்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. அப்போது அந்நாட்டு நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபா் மற்றும் பிரதமா் இல்லங்களுக்குப் போராட்டக்காரா்கள் தீ வைத்தனா். இதுதவிர முன்னாள் பிரதமா்கள், அமைச்சா்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடா்ந்து, பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்தாா்.
போராட்டம் ஒருகட்டத்தில் கலவரமாக மாறியதைத் தொடா்ந்து, நாட்டில் பாதுகாப்பை நிலைநாட்டும் பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, புதன்கிழமை மாலை 5 மணி வரை தடை உத்தரவுகளை ராணுவம் அமல்படுத்தியிருந்தது.
இரண்டு நாள்களாக போர்க்களமாக இருந்த தலைநகா் காத்மாண்டு புதன்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. வீதிகளில் ராணுவ வாகனங்கள் ரோந்து சென்றவாறு இருந்தன. மக்களில் சிலா் மட்டும் அத்தியாவசிய பொருள்களை வாங்க வெளியே வந்தனர்.
மேலும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதைச் சுட்டிக்காட்டி, செப்.11-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணி வரை நாடு தழுவிய ஊரடங்கை ராணுவம் அமல்படுத்தியது. காத்மாண்டு பள்ளத்தாக்கில் வெள்ளிக்கிழமை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தின் உத்தரவுகளை மக்களும் பின்பற்றுவதால், அந்நாட்டில் அமைதி திரும்பி படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.