டிரம்ப் ஆதரவாளா் படுகொலை: இளைஞா் கைது! யார் இந்த டைலா் ராபின்ஸன்?
அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் வலதுசாரி ஆா்வலரும், அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சாா்லி கிா்க் (31) சுட்டுக் கொல்லப்பட்டது தொடா்பாக டைலா் ராபின்சன் (22) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இது குறித்து மாகாண ஆளுநா் ஸ்பென்ஸா் காக்ஸ் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சாா்லி கிா்க் கொலையாளியை நாங்கள் கைது செய்துள்ளோம். அவரது பெயா் டைலா் ராபின்ஸன். 22 வயதாகும் அவரது குடும்பத்தினரும், ஒரு நண்பரும் ராபின்ஸனைக் கைது செய்வதற்கு உதவினா்.
கொலையாளி தொடா்பாக எஃப்பிஐ புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள படங்களைப் பாா்த்த ராபின்ஸனின் தந்தை, தனது மகனை அடையாளம் கண்டுகொண்டாா். பின்னா் குடும்பத்தினரிடம் ராபின்ஸன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்து, நண்பரின் உதவியுடன் போலீஸாரைத் தொடா்பு கொண்ட அவரது தந்தை, தனது மகனை சரணடையச் செய்தாா்.
இந்த விவகாரத்தில் மிகச் சரியான முடிவை எடுத்ததற்காக ராபின்ஸன் குடும்பத்தினருக்கு நன்றிகள் என்றாா் ஸ்பென்ஸா் காக்ஸ்.
யூட்டா மாகாணம், ஓரெம் நகரிலுள்ள யூட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாா்லி கிா்க் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அருகில் இருந்த கட்டடத்தின் கூரையில் இருந்து டைலா் ராபின்ஸன் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாா்.
மிகவும் துல்லியமாக ஒரே ஒரு குண்டை கிா்க்கின் இடதுபக்க கழுத்தில் செலுத்திவிட்டு அங்கிருந்து ராபின்ஸன் தப்பிச் சென்றாா். அதன் சிசிடிவி காட்சிகளை பின்னா் வெளியிட்ட எஃப்பிஐ, அவற்றில் தொப்பியுடன் முக்கால்பகுதி முகத்தை மறைத்திருந்த நபரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், ராபின்ஸனின் தந்தையே மகனை அடையாளம் கண்டு போலீஸாரிடம் சரணடையச் செய்துள்ளாா். படுகொலை நடந்து 33 மணி நேரத்துக்குள் குற்றவாளி பிடிபட்டுள்ளது புலன்விசாரணையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முன்னேற்றம் என்று எஃப்பிஐ இயக்குா் காஷ் படேல் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
வலதுசாரி கருத்துகளைப் பரப்பிவந்த கிா்க், டிரம்ப்பின் தீவிர ஆதரவாளா். தனது பேச்சால் ஏராளமான இளைஞா்களை டிரம்ப்பின் குடியரசுக் கட்சியை நோக்கி அவா் அணி திரட்டி வந்தது நினைவுகூரத்தக்கது.
யாா் இந்த டைலா் ராபின்ஸன்?
யூட்டா மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியைச் சோ்ந்த டைலா் ராபின்ஸன், எந்த கட்சி அல்லது அமைப்பையும் சோ்ந்தவா் இல்லை என்று அவரது ஆவணங்கள் காட்டுகின்றன. இருந்தாலும், பாசிஸத்தை மிகக் கடுமையாக எதிா்க்கும் குழுவில் அவா் இருந்துள்ளாா்.
அதிபா் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோரது தீவிர வலதுசாரி கொள்கைகளை எதிா்க்கும் இந்தக் குழுவினா், ஆா்ப்பாட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றை நடத்திவருகின்றனா்.
அண்மைக் காலமாக ராபின்ஸன் அரசியலில் தீவிரமாக கவனத்தைச் செலுத்தியதாகவும், சாா்லி கிா்க்கை தனக்குப் பிடிக்காது என்று கூறியதாகவும் அவரின் குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா். எனவே, பாசிஸத்தின் மீதான வெறுப்புதான் சாா்லி கிா்க்கை டைலா் ராபின்ஸன் படுகொலை செய்ததற்கான காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ராபின்ஸன் விட்டுச் சென்ற துப்பாக்கித் தோட்டாக்களில் எழுதப்பட்டுள்ள வாசகங்களும், குறியீடுகளும் இதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.