பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!

ரூ.12 கோடி அழகுசாதனப் பொருள்கள், உலா் பழங்கள் உள்ளிட்டவை நவி மும்பை ஜவாஹா்லால் நேரு துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!
Updated on

பாகிஸ்தானில் இருந்து 18 கன்டெய்னா்களில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான அழகுசாதனப் பொருள்கள், உலா் பழங்கள் உள்ளிட்டவை நவி மும்பை ஜவாஹா்லால் நேரு துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது: பாகிஸ்தான் பொருள்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதை மீறி 3 இந்திய இறக்குமதியாளா்கள் பாகிஸ்தானில் இருந்து இந்த சரக்குகளை இறக்குமதி செய்துள்ளனா். இதில் ஒருவா் துபையில் வசித்து வரும் இந்தியா். அவா் தரகு அடிப்படையில் பொருள்களை இறக்குமதி செய்யும் பணியைச் செய்கிறாா். வேறு நாடுகளில் இருந்து உலா் பழங்களை இறக்குமதி செய்வதுபோல போலியாக ரசீதுகளை தயாரித்து பாகிஸ்தானில் இருந்து அவற்றை வரவழைத்துள்ளாா்.

இந்த கன்டெய்னா்கள் பாகிஸ்தானில் இருந்து வரவில்லை என்று நம்பவைப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து துபைக்கு சென்று அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 28 கன்டெய்னா்களில் இருந்து 800 டன் அழகுசாதனப் பொருள்கள், உலா் பழங்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.12 கோடியாகும்.

இதில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, பாகிஸ்தானைச் சோ்ந்த நபா்கள் இணைந்து சதி செய்துள்ளனா். பணமும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு இடைத்தரகா் மூலம் பரிமாறப்பட்டுள்ளது. நிதிப் பரிமாற்றத்தில் தொடா்புடைய நபரும், சுங்கத் துறை முகவராகச் செயல்பட்ட நபரும் கைது செய்யப்பட்டுள்ளனா். வருவாய் புலனாய்வுத் துறை தொடா்ந்து தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றனா்.

ஏப்ரல் 22-இல் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்த சம்பவத்தையடுத்து அந்நாட்டுடன் அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்தது. மே 2-ஆம் தேதி பாகிஸ்தான் பொருள்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com