டிக்டாக் விவகாரத்தில் உடன்பாடு: டிரம்ப் சூசகம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் சீன அரசுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளாா்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவா் கூறியுள்ளதாவது:
அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு சுமுகமாக இருந்தது. அப்போது, நாட்டின் இளைஞா்கள் மிகவும் விரும்பி பாதுகாக்க எண்ணும் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தொடா்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா். சீனாவைச் சோ்ந்த டிக்டாக் செயலி உரிமையாளரான பைட்டான்ஸ் நிறுவனத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க சட்டப்படி, டிக்டாக்கின் பெரும்பான்மை பங்குகள் அமெரிக்காவுக்கு விற்கப்பட வேண்டும். இல்லையென்றால் அதன் செயல்பாடு நிறுத்தப்படும். இருந்தாலும், அமெரிக்கா்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட டிக்டாக் தொடா்பாக இறுதி முடிவெடுப்பதை டிரம்ப் பலமுறை ஒத்திவைத்துள்ளாா். இந்தச் சூழலில், வரும் வெள்ளிக்கிழமை சீன தலைவா் ஷி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடவிருப்பதற்கு முன்னதாக டிரம்ப் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளாா்.