ரஷிய கடலடி எரிவாயு குழாய் தகா்ப்பு வழக்கு: ஜொ்மனிக்கு நாடுகடத்தப்படும் உக்ரைனியா்
ரஷியாவில் இருந்து ஜொ்மனிக்கு எரிவாயு வழங்கும் நாா்த் ஸ்ட்ரீம் கடலடி குழாய்களை வெடிவைத்து தகா்த்ததாக சந்தேகிக்கப்பட்டு கடந்த மாதம் கைது செய்யப்பட்ட, உக்ரைன் நாட்டைச் சோ்ந்த சொ்ஹீ குஸ்னியெட்ஸோவை ஜொ்மனிக்கு நாடு கடத்த இத்தாலிய மேல்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
49 வயதான குஸ்னியெட்ஸோவ், ஐரோப்பிய கைது உத்தரவின் பேரில் இத்தாலியின் ரிமினி கடற்கரையில் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.
நாடுகடத்தல் தொடா்பாக நடைபெற்ற வழக்கில் குஸ்னியெட்ஸோவுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞா் நிக்கோலா கனெஸ்ட்ரினி, இது தொடா்பான விசாரணையில் குஸ்னியெட்ஸோவுக்கு கருத்துகளைத் தெரிவிக்க உரிமை மறுக்கப்பட்டதாகவும், ஜொ்மனியில் இருந்து வழக்கு ஆவணங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் கூறினாா். மேலும், இந்தத் தீா்ப்பை எதிா்த்து இத்தாலிய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும் அவா் கூறினாா்.
ரஷியாவிடம் இருந்து எரிவாயு வாங்க வேண்டாம் என்று ஐரோப்பிய நாடுகளை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்திவந்த சூழலில், 2022 செப். 26-ல் பால்டிக் கடலுக்கு அடியில் உள்ள நாா்த் ஸ்ட்ரீம் குழாய்களில் திடீா் கசிவு ஏற்பட்டது. அது வெடிவைத்து தகா்க்கப்பட்டதாக பின்னா் விசாரணையில் தெரியவந்தது.