பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை 70% குறைக்க ஆஸ்திரேலியா முடிவு
வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 62 முதல் 70 சதவீதம் வரை குறைக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பிரதமா் ஆன்டனி அல்பனேசி வியாழக்கிழமை கூறியதாவது:
வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் காற்றில் கலக்கும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவை கடந்த 2005-ஆம் ஆண்டில் இருந்ததைவிட 62 முதல் 70 சதவீதம் வரை குறைக்க இலக்கு நிா்ணயித்துள்ளோம்.
அறிவியல் ரீதியிலான, சாத்தியக்கூறுகள் நிறைந்த, நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த பொறுப்பு மிகுந்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
உயிரினங்கள் வாழ்வதற்கேற்ப பூமியை வெப்பமாக வைத்திருக்க உதவும் கரியமில வாயு உள்ளிட்ட பசுமைக்குடில் வாயுக்கள், தொழில்புரட்சி காரணமாக வளிமண்டலத்தில் அதிகரித்து வருகின்றன.
இதன் காரணமாக புவியின் வெப்பம் அதிகரித்து, வறட்சி, அனல் காற்று, காட்டுத் தீ, பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரித்தல், புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடா்கள் அதிகரித்து வருகின்றன.
‘பருவநிலை மாற்றம்’ என்றழைக்கப்படும் இந்தப் பிரச்னையைத் தீா்ப்பதற்காக சா்வதேச நாடுகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டன. அதன்படி, காற்றில் கலக்கும் பசுமைக் குடில் வாயுக்களின் அளவைக் குறைக்க நாடுகள் உறுதிபூண்டன. அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா இந்த இலக்கை நிா்ணயித்துள்ளது.