
நேபாளத்தின் ஜென் - ஸி போராட்டத்தில், துப்பாக்கிச் சூடு நடத்த அரசு உத்தரவு கொடுக்கவில்லை எனப் பதவி விலகிய முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி தெரிவித்துள்ளார்.
நேபாள நாட்டில், சமூக ஊடகங்கள் மீதான தடைகள் மற்றும் ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றை எதிர்த்து, ஜென் - ஸி என்றழைக்கப்படும் இளம்தலைமுறையினர் மாபெரும் போராட்டம் நடத்தினர்.
கடந்த செப்.8 ஆம் தேதி, போராட்டத்தின் முதல் நாளின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 19 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, போராட்டம் வன்முறையாக வெடித்ததால், அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இதனால், நேபாள அரசு கவிழ்க்கப்பட்டு, கடந்த செப்.12 ஆம் தேதி முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சுசீலா கார்கி இடைக்கால பிரதமராகப் பதவியேற்றார்.
இதனைத் தொடர்ந்து, ராணுவத்தின் பாதுகாப்பில் அவர்களது முகாம்களில் தங்கியிருந்த முன்னாள் பிரதமர் சர்மா ஓலி அங்கிருந்து நேற்று (செப்.18) வெளியேறி தனியார் வீட்டில் குடியேறியுள்ளார்.
இந்நிலையில், நேபாளத்தின் 10 ஆவது அரசியலமைப்பு நாளை முன்னிட்டு இன்று சர்மா ஓலி தனது முகப்புத்தகப் பக்கத்தில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அரசு உத்தரவு வழங்கவில்லை எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில்:
“போராட்டக்காரர்கள் மீது சுடப்பட்ட தோட்டாக்கள் ஆட்டோமேடிக் துப்பாக்கிகளில் இருந்து வந்தவை. காவல் துறையினரிடம் அத்தகைய துப்பாக்கிகள் கிடையாது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அமைதியான போராட்டத்தில் ஊடுருவிய சதிகாரர்கள் வன்முறையாக அதை மாற்றினார்கள். இதனால்தான், நமது இளைஞர்கள் கொல்லப்பட்டனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேபாள வன்முறையில் 3 காவல் துறை அதிகாரிகள் உள்பட மொத்தம் 72 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆப்கனில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்குத் தடை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.