
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவந்த காஸா போர் நிறுத்தத் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்ததால் காஸாவில் போர் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போர் 2 ஆண்டுகளை நெருங்கி வருகிறது. தற்போது வரை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் காஸாவில் பலி எண்ணிக்கை 65,000-யைக் கடந்துள்ளது. அங்குள்ள மக்கள் உணவு, தண்ணீர், மருந்துகள் இன்றி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காஸாவின் மையப் பகுதியை நோக்கி இரண்டு படைப் பிரிவுகள் முன்னேறி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. வடக்கு காஸா, மத்திய காஸாவில் உள்ள மக்கள் தெற்கு நோக்கி கூட்டம்கூட்டமாக படையெடுத்து வருகின்றன. தெற்கில் இஸ்ரேல் ராணுவத்தின் மனிதாபிமான பகுதிகளுக்கு பலரும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இது ஒரு இனஅழிப்பு என்று ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பின்னால் பல அரசியல் காரணங்கள் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
காஸாவில் உள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் இஸ்ரேல் ராணுவம் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. காஸாவில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், காஸாவில் போரை நிறுத்துவதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தது. தற்காலிக 10 உறுப்பு நாடுகள் இணைந்து கொண்டு வந்த இந்த தீர்மானத்தின்படி காஸாவில் உடனடி போர் நிறுத்தம், ஹமாஸ் பிடியில் உள்ள அனைத்துப் பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவிப்பது, காஸாவிற்குள் மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதியளித்து உள்ளிட்டவை அடங்கும்.
இந்த தீர்மானத்தின் மீது நிரந்தர உறுப்பு நாடுகள் ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆதரவு தெரிவித்த நிலையில், அமெரிக்கா மட்டும் தனது வீட்டோ சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது. இதனால் தீர்மானம் தோல்வி அடைந்தது. மொத்தமுள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் அமெரிக்கா மட்டும் எதிராகவும் வாக்களித்துள்ளன. அமெரிக்கா 6 ஆவது முறையாக இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தால் மட்டுமே அது வெற்றி பெறும். இந்நிலையில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதற்கு இஸ்ரேல் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.