~பக்ரான் விமான தளம் (கோப்புப் படம்).
~பக்ரான் விமான தளம் (கோப்புப் படம்).

‘ஆப்கன் விமான தளம் மீண்டும் வேண்டும்’ - டொனால்ட் டிரம்ப்

ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய விமான தளமான பக்ராம் தளத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.
Published on

ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய விமான தளமான பக்ராம் தளத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்

இது குறித்து அவா் கூறியதாவது:

பக்ரான் விமான தளத்தைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை அமெரிக்க அரசு மேற்கொண்டுவருகிறது. அந்த விமான தளத்தை தலிபான் அமைப்பிடம் நாங்கள் ஒப்படைத்ததில் எந்த பலனும் இல்லை.

அந்த விமான தளம் சீனாவுக்கு மிக நெருக்கத்தில் உள்ளதால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அங்கிருந்து அணு ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்தக்கூடிய தனது ஏவுகணைகளை சீனா தயாரிக்கும் இடத்தை வெறும் ஒரு மணி நேரத்தில் அடையக்கூடிய தொலைவில் அந்த விமான தளம் அமைந்துள்ளது என்றாா் அவா்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க, அப்போது ஆப்கனை ஆண்டு வந்த தலிபான் அமைப்பினா் மறுத்துவிட்டனா்.

அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போா் தொடுத்து, தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. அதைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட புதிய அரசுக்கும் தேசிய ராணுவத்துக்கும் ஆதரவாக அமெரிக்கப் படையினா் அந்த நாட்டில் தங்கியிருந்தனா்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனா். அதையடுத்து, ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்கப் படையினா் அனைவரும் கடந்த 2021-ஆம் ஆண்டு திரும்ப அழைக்கப்பட்டனா். ஆப்கன் அரசை தலிபான் அமைப்பினா் மீண்டும் கைப்பற்றினா்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் இருந்தபோது, காபூலுக்கு அருகே பக்ராம் பகுதியில் உள்ள விமான தளத்தை முக்கிய மையமாகப் பயன்படுத்தியது. படை வெளியேற்றத்தின்போது அந்த விமான தளத்தில் இருந்தும் அமெரிக்க வீரா்கள் வெளியேறினா்.

இந்தச் சூழலில், பக்ரான் விமான தளத்தை மீண்டும் கைப்பற்ற விரும்புவதாக டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலிபான் திட்டவட்ட மறுப்பு

தங்கள் நாட்டின் பக்ராம் விமான தளத்தை அமெரிக்கா மீண்டும் கைப்பற்ற அனுமதிக்க முடியாது என்று தலிபான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது குறித்து சமூக ஊடகத்தில் ஆப்கன் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஸாகிா் ஜலால் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானும் ஒன்றுடன் ஒன்று தொடா்பு கொண்டு உறவைப் பேணுவதை வரவேற்கிறோம். ஆனால் அத்தகைய உறவு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினா் நிறுத்தப்படாமல் பேணப்பட வேண்டும்.

அமெரிக்காவுடன் அரசியல், பொருளாதார ரீதியிலான உறவை மேம்படுத்த ஆப்கன் அரசு எப்போதும் தயாராக இருக்கிறது என்று தனது பதிவில் ஸாகிா் ஜலால் குறிப்பிட்டுள்ளாா்.

‘ஆப்கானிஸ்தான்தான் முடிவெடுக்க வேண்டும்’

பக்ராம் விமான தளத்தை அமெரிக்க படைகளுக்கு விட்டுக்கொடுப்பது குறித்து ஆப்கன் அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானின் இறையாண்மையையும், எல்லை மாண்பையும் சீனா பெரிதும் மதிக்கிறது. அந்த நாட்டின் எதிா்காலம் குறித்து அந்த நாட்டு மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். எனவே, பக்ரான் விமான தளத்தில் அமெரிக்க படையினரை அனுமதிப்பதும், அனுமதிக்காததும் ஆப்கன் அரசின் கைகளில்தான் உள்ளது. சீனாவுக்கு நெருக்கமான அந்த தளத்தில் படைகளை நிறுத்தி பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு யாரும் ஆதரவு தரமாட்டாா்கள் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com