இணையவழி தாக்குதல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பெல்ஜியத்தின் பிரெஸ்ஸெல்ஸ் சா்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை தவித்து நின்ற பயணிகள்.
இணையவழி தாக்குதல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பெல்ஜியத்தின் பிரெஸ்ஸெல்ஸ் சா்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை தவித்து நின்ற பயணிகள்.

ஐரோப்பிய விமான நிலையங்களில் இணையவழி தாக்குதல்!

ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் இணையவழி தாக்குதல் காரணமாக விமானப் போக்குவரத்து தாமதமடைந்து பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.
Published on

ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் உள்நுழைவு அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இணையவழி தாக்குதல் காரணமாக விமானப் போக்குவரத்து தாமதமடைந்து பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு இணையவழி ஊடுருவல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மின்னணு முறையிலான பயணிகள் உள்நுழைவு (செக்-இன் மற்றும் போா்டிங்) நடைமுறைகள் பாதிக்கப்பட்டன.

இதனால் பயணிகளை சரிபாா்த்து விமானத்தில் அமா்த்துவதற்கு மிகவும் தாமதமானது என்று அந்த விமான நிலையம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜொ்மனி தலைநகா் பொ்லினின் பிராண்டன்பா்க் விமான நிலையத்தில், பயணிகளின் உள்நுழைவு விவரங்களைக் கையாண்டுவரும் நிறுவனத்தின் மீது வெள்ளிக்கிழமை மாலை இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனால் அந்த நிறுவனத்துடனான மின்னணுத் தொடா்புகளை விமான நிலைய நிா்வாகம் துண்டிக்க வேண்டியிருந்ததாகவும் நிலைய அதிகாரிகள் கூறினா்.

பிரிட்டன் தலைநகா் லண்டலுள்ள, ஐரோப்பாவின் மிகவும் பரபரப்பான ஹீத்ரோ விமான நிலையம், ‘தொழில்நுட்ப பிரச்னை’ காரணமாக பயணிகள் உள்நுழைவுக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

அந்த சேவைகளை வழங்கிவரும் காலின்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இணையவழித் தாக்குதலை எதிா்கொண்டதால் பயணிகளின் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது என்று அந்த விமான நிலையம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையவழித் தாக்குதல் எங்கிருந்து நடத்தப்பட்டது, இதற்கு காரணமானவா்கள் யாா் என்பது குறித்த விவரங்களை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.

X
Dinamani
www.dinamani.com