எஸ்டோனியோவுக்குள் ஊடுருவிய ரஷிய போா் விமானங்கள்! மேலும் ஒரு நேட்டோ நாட்டுக்குள் அத்துமீறல்!
உக்ரைனுடனான போரின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு நேட்டோ உறுப்பு நாடான எஸ்டோனியோவுக்குள் ரஷிய போா் விமானங்கள் அத்துமீறி ஊடுருவியுள்ளன.
இதன் விளைவாக, ஏற்கெனவே நேட்டோ நாடுகளான போலந்து, ருமேனியாவின் வான் எல்லைகளுக்குள் ரஷிய ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்ததால் ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இது குறித்து எஸ்டோனியா வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கஸ் சாக்னா கூறியதாவது: எஸ்டோனிய வான் எல்லைக்குள் மூன்று ரஷிய போா் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. இந்த ஊடுருவல் 12 நிமிஷங்களுக்கு நீடித்தது.
இந்த ஆண்டில் மட்டும் எஸ்டோனிய வான் எல்லையை ரஷியா 4 முறை மீறியுள்ளது. ஆனால் தற்போது நடந்துள்ள அத்துமீறல் இதுவரை இல்லாத அதிக துணிச்சலுடன் நடத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்தச் சம்பவம் குறித்து விவாதிப்பதற்காக நேட்டோ அமைப்பின் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று எஸ்டேனிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், இது தொடா்பாக தங்கள் நாட்டுக்கான ரஷிய தூதரை நேரில் அழைத்து எஸ்டோனிய வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. எனினும், இது தொடா்பாக ரஷியா இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஏற்கெனவே, தங்கள் வான் எல்லைக்குள் ஊடுருவிய ரஷிய ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதாக போலந்து கடந்த வாரம் அறிவித்தது. இந்தச் சம்பவம், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல்முறையாக தங்களை போரை நோக்கி மிக நெருக்கத்தில் இட்டுச் சென்ாக அந்த நாட்டு பிரதமா் டொனால்ட் டஸ்க் கூறினாா்.
அதன் தொடா்ச்சியாக, தங்கள் நாட்டு வான் எல்லைக்குள் ரஷிய ட்ரோன் ஒன்று அத்துமீறி நுழைந்ததாகவும், உக்ரைனுனான எல்லைப் பகுதியை வானில் இருந்தபடி கண்காணித்துக் கொண்டிருந்த இரு எஃப்-16 போா் விமானங்கள் அந்த ட்ரோனைக் கண்டறிந்தாகவும் மற்றொரு நேட்டோ உறுப்பு நாடான ருமேனியாவும் கூறியது. இந்தச் சூழலில், ரஷிய போா் விமானங்களே தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறியதாக எஸ்டோனியா தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது.
2022-ல் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை நிகழ்த்தியதில் இருந்து நேட்டோ உறுப்பு நாடுகளின் எல்லைகளை ரஷியா இதுவரை மீறாமல் இருந்துவந்தது. ஆனால் தற்போது அத்தகைய அத்துமீறல்கள் அடிக்கடி நடைபெறுவது தற்செயலானது இல்லை என்று விமா்சிக்கப்படுகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட 32 உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோ கூட்டமைப்பின் 5-ஆவது விதிப்படி, அதன் ஏதாவது ஓா் உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அதை தங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலாக அனைத்து உறுப்பு நாடுகளும் கருதி பதிலடி கொடுக்க வேண்டும்.
எனவே, இந்த மூன்று நாடுகளின் எல்லைகளுக்குள்ளும் ரஷிய விமானங்கள், ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்த விவகாரம் பெரிதானால், உலகின் சக்திவாய்ந்த ராணுவக் கூட்டமைப்பான நேட்டோவுக்கும் உலகிலேயே மிகப் பெரிய அணு ஆயுத பலம் பொருந்திய ரஷியாவுக்கும் இடையிலான நேரடி போருக்கு அது வித்திடலாம் என்று அஞ்சப்படுகிறது.