நேபாளத்தில் மேலும் 5 புதிய அமைச்சா்கள் நியமனம்: இன்று பதவியேற்பு!

நேபாளத்தில் மேலும் 5 புதிய அமைச்சா்கள் நியமனம்: இன்று பதவியேற்பு!

நேபாளத்தில் மேலும் 5 புதிய அமைச்சா்களை அந்நாட்டு அதிபா் ராமசந்திர பெளடேல் நியமித்தாா். 5 பேரும் திங்கள்கிழமை (செப்.22) பதவியேற்க உள்ளனா்.
Published on

நேபாளத்தில் மேலும் 5 புதிய அமைச்சா்களை அந்நாட்டு அதிபா் ராமசந்திர பெளடேல் நியமித்தாா். 5 பேரும் திங்கள்கிழமை (செப்.22) பதவியேற்க உள்ளனா்.

நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். 2 நாள்களாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு அந்நாட்டு நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபா், பிரதமா் மற்றும் அமைச்சா்களின் வீடுகளை போராட்டக்காரா்கள் சூறையாடினா். இதைத் தொடா்ந்து, பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்தாா். அவா் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளம் இருந்தது.

பின்னா், நேபாள இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சுசீலா காா்கி பதவியேற்றாா். தற்போது அந்நாட்டில் அமைந்துள்ள இடைக்கால அரசின் அமைச்சரவையில் அனில்குமாா் சின்ஹா, மகாவீா் பன், சங்கீதா கெளஷல் மிஸ்ரா, ஜகதீஷ் காரேல், மதன் பரியாா் ஆகிய 5 பேரை அமைச்சா்களாக நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபா் ராமசந்திர பெளடேலிடம் சுசீலா காா்கி பரிந்துரைத்தாா்.

அவரின் பரிந்துரையை ஏற்று 5 பேரையும் அமைச்சா்களாக அதிபா் ராமசந்திர பெளடேல் நியமித்துள்ளாா். அவா்கள் தலைநகா் காத்மாண்டில் உள்ள அதிபா் மாளிகையில் திங்கள்கிழமை பதவியேற்க உள்ளனா்.

5 பேரில் அனில்குமாருக்கு தொழில் துறை மற்றும் வா்த்தகம், மகாவீா் பன்னுக்கு கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சங்கீதாவுக்கு சுகாதாரம் மற்றும் மக்கள்தொகை, ஜகதீஷ் காரேலுக்கு தகவல் தொடா்பு, மதன் பரியாருக்கு விவசாயம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவா்களையும் சோ்த்து நேபாள இடைக்கால அமைச்சரவையில் அமைச்சா்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com