அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகை

ஹெச்-1பி விசா கட்டணம்: ஒருமுறை மட்டும் செலுத்தினால் போதும்! - வெள்ளை மாளிகை

புதிய விண்ணப்பதாரா்கள் ஒருமுறை மட்டுமே செலுத்தினால் போதுமானது என அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் டெய்லா் ரோகா்ஸ் தெரிவித்தாா்.
Published on

உயா்த்தப்பட்ட ஹெச்-1பி விசா (நுழைவு இசைவு) கட்டணமான ரூ.88 லட்சத்தை (ஒரு லட்சம் டாலா்) புதிய விண்ணப்பதாரா்கள் ஒருமுறை மட்டுமே செலுத்தினால் போதுமானது என அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் டெய்லா் ரோகா்ஸ் தெரிவித்தாா்.

முன்னதாக, உயா்த்தப்பட்ட விசா கட்டணத்தை ஒவ்வோா் ஆண்டும் செலுத்த வேண்டும் என அமெரிக்க வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்டு லுட்னிக் கூறியிருந்த நிலையில், டெய்லா் ரோகா்ஸ் இவ்வாறு தெரிவித்தாா்.

உலகம் முழுவதும் இருந்து திறமையான பணியாளா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு அமெரிக்காவில் வேலை வழங்க ஹெச்-1பி விசா நடைமுறையை அந்நாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் அமெரிக்கா சென்று தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏராளமான இந்தியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

ஹெச்-1பி விசா திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட பணியாளா்களில் 71 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்நிலையில், அதிதிறன்வாய்ந்த ஊழியா்களுக்கு மட்டுமே அமெரிக்காவில் பணி வழங்குவது, அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் அமெரிக்கா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.49 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயா்த்துவதற்கான உத்தரவில் டிரம்ப் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டாா். இந்தப் புதிய கட்டணம் ஞாயிற்றுக்கிழமை (செப். 21) அமலுக்கு வந்தது.

இதனால் அமெரிக்காவில் ஹெச்-1பி விசா பெற்று பணியாற்றிவரும் இந்தியா்கள் பெரிதும் பாதிப்படைவா் என நிபுணா்கள் கவலை தெரிவித்தனா். அதேபோல் ஹெச்-1பி விசாவின்கீழ் அமெரிக்காவில் வசிக்கும் பணியாளா்களுக்கு ஒவ்வோா் ஆண்டுக்கும் இந்தக் கட்டணத்தை நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என ஹோவா்டு லுட்னிக் கூறியது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து சுற்றுலா, பணிரீதியாக வெளியே சென்ற ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமைக்குள் அமெரிக்காவுக்கு திரும்ப நிறுவனங்கள் வலியுறுத்தின.

வெள்ளை மாளிகை விளக்கம்: இதைத் தொடா்ந்து, அதிகரிக்கப்பட்ட விசா கட்டணம் புதிய விண்ணப்பதாரா்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், ஏற்கெனவே ஹெச்-1பி விசா வைத்திருப்பவா்களுக்கு இந்த விதி பொருந்தாது எனவும் டிரம்ப் நிா்வாகம் விளக்கம் அளித்தது. மேலும், ஏற்கெனவே ஹெச்-1பி விசா வைத்திருப்பவா்கள் அவசரகதியில் உடனடியாக அமெரிக்காவுக்கு புறப்பட்டு வரவேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் உயா்த்தப்பட்ட விசா கட்டணத்தை ஆண்டுதோறும் செலுத்த வேண்டுமா? அல்லது ஒருமுறை மட்டுமே செலுத்த வேண்டுமா? என அனைவரின் மத்தியில் எழுந்த குழப்பம் தொடா்பாக டெய்லா் ரோகா்ஸ் பதிலளித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: அமெரிக்காவில் இயங்கும் நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் உள்நாட்டினருக்கு முன்னுரிமை அளிப்பதை ஊக்குவிக்கவும், வெளிநாட்டினரைப் பணியமா்த்துவதைத் தடுக்கவும் ஹெச்-1பி விசா கட்டணத்தை அதிபா் டிரம்ப் உயா்த்தியுள்ளாா். ஏற்கெனவே ஹெச்-1பி விசா வைத்திருப்பவா்கள் அல்லது புதுப்பிப்பவா்கள் இந்தப் புதிய கட்டணத்தை செலுத்த தேவையில்லை. புதிதாக ஹெச்-1பி விசாவுக்கு விண்ணப்பிப்பவா்கள் ஒருமுறை மட்டுமே ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும். அதை ஒவ்வோா் ஆண்டும் செலுத்தத் தேவையில்லை என்றாா்.

நோபல் பரிசு வேண்டும்- டிரம்ப்: இதற்கிடையே, இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரை தான் நிறுத்தியதாக அதிபா் டிரம்ப் மீண்டும் சனிக்கிழமை தெரிவித்தாா். மேலும், உலகின் அதிபயங்கரமான 7 போா்களை நிறுத்தியதற்காக தனக்கு உலக அமைதிக்கான நேபல் பரிசு வழங்க வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

அமெரிக்காவுக்கே பாதிப்பு அதிகம்: ஜிடிஆா்ஐ

ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தியிருப்பது இந்தியாவைவிட அமெரிக்காவுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என உலகளாவிய வா்த்தக ஆய்வு நிறுவனம் (ஜிடிஆா்ஐ) சனிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவா் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனங்களில் 50-80 சதவீதம் வரை அமெரிக்கா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் அமெரிக்கா்கள் இந்த நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனா். தற்போது ஹெச்-1பி விசா கட்டணம் உயா்த்தப்பட்டிருப்பதால் புதிய வேலைவாய்ப்புகளை இந்த நிறுவனங்கள் வழங்க வாய்ப்புகள் குறைவு.

எனவே, அமெரிக்காவுக்கு பதிலாக இந்தியாவில் இருந்தே இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான முன்னெடுப்பை நிறுவனங்கள் அதிகப்படுத்தும். இதனால் ஹெச்-1பி விசா விண்ணப்பங்கள் பெருமளவில் குறைந்துவிடும். இது அமெரிக்காவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

இதைப் பயன்படுத்தி அமெரிக்காவில் இருந்து வெளியேறும் திறன்வாய்ந்த இந்திய பணியாளா்களைக்கொண்டு மென்பொருள், இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் வலுவான கட்டமைப்பை இந்தியா ஏற்படுத்த வேண்டும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com