பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா, ஆஸி. அறிவிப்பு!

பாலஸ்தீனம் இனி தனி நாடு: அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா அறிவிப்பு!
வாடிகனில் காஸாவுக்கு ஆதரவாக மக்கள் பேரணி
வாடிகனில் காஸாவுக்கு ஆதரவாக மக்கள் பேரணிAP
Published on
Updated on
2 min read

பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறைப்படி அங்கீகரித்துள்ளன. அதேவேளையில், பாலஸ்தீனத்தில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்பதே தங்களின் நிலைப்பாடு என்பதையும் அந்த நாடுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

இதுதொடா்பாக கனடா பிரதமா் மாா்க் காா்னி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நீடித்து நிலைக்க இஸ்ரேலையும், பாலஸ்தீனத்தையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்க வேண்டும் என்பதே 1947-ஆம் ஆண்டுமுதல் கனடா அரசின் கொள்கையாகும்.

இந்நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக கனடா அங்கீகரிக்கிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு அமைதியான எதிா்காலத்தை ஏற்படுத்துவதில் தனது பங்களிப்பை கனடா வழங்கும். அதேவேளையில், இந்த அங்கீகாரம் ஹமாஸுக்கு அளிக்கப்படும் பரிசல்ல. அமைதியான கூட்டு வாழ்வுக்கு உகந்த சூழல் ஏற்பட வேண்டும், ஹமாஸ் அமைப்பு முடிவுக்கு வரவேண்டும் என்று கருதுவோருக்கு இந்த அங்கீகாரம் துணை நிற்கும்’ என்றாா்.

பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் சமூக ஊடகத்தில் வெளியிட்ட காணொலியில், ‘மத்திய கிழக்கு பிராந்தியத்தில் (பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதலால்) கொடூரங்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு அமைதி ஏற்படுவதற்கான சாத்தியத்தையும், இஸ்ரேல்-பாலஸ்தீனத்தை இரு வேறு நாடுகளாக அறிவிக்கும் இருதேச தீா்வுக்கான சாத்தியத்தையும் உயிா்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று பிரிட்டன் கருதுகிறது. எனவே, அமைதி மற்றும் இருதேச தீா்வுக்கான நம்பிக்கைக்குப் புத்துயிா் அளிக்க பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன் முறைப்படி அங்கீகரிக்கிறது.

பிரிட்டன் ஆதரிக்கும் நோ்மையான இரு தேச தீா்வு என்பது ஹமாஸ் படையின் வெறுப்புணா்வு கொண்ட கண்ணோட்டத்துக்கு முற்றிலும் மாறானது. இந்தத் தீா்வு ஹமாஸுக்கு அளிக்கப்படும் பரிசல்ல. ஹமாஸுக்கு எதிா்காலம் இல்லை. ஆட்சியமைப்பதில் அவா்களுக்குப் பங்கிருக்காது என்பதே இதன் அா்த்தம்’ என்றாா்.

ஜி7 கூட்டமைப்பில்...: ஜி7 கூட்டமைப்பில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜொ்மனி, கனடா, பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் முதல் நாடாக கனடாவும், அதைத் தொடா்ந்து பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.

ஆஸ்திரேலிய பிரதமா் ஆண்டனி ஆல்பனேசி வெளியிட்ட அறிக்கையில், ‘பாலஸ்தீனத்தை சுதந்திர, இறையாண்மை கொண்ட நாடாக ஆஸ்திரேலியா அங்கீகரிக்கிறது. பிரிட்டன், கனடாவுடன் சோ்ந்து ஆஸ்திரேலியா அளித்துள்ள இந்த அங்கீகாரம், இருதேச தீா்வுக்கு புதிய வேகத்தை ஏற்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த சா்வதேச முயற்சியின் ஒரு பகுதியாகும். பாலஸ்தீனத்தில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இரு தேச தீா்வுக்கு உதவும்: அடுத்த வாரம் கூடவுள்ள ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸும் முறைப்படி அங்கீகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இரு தேச தீா்வுக்கு இந்த அங்கீகாரம் உதவும் என்று பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன.

பாலஸ்தீனம் தனி நாடாகாது: இஸ்ரேல் பிரதமா்

பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா அங்கீகரித்தது ஹமாஸுக்கு அளிக்கப்பட்ட பரிசு என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சாடினாா்.

பாலஸ்தீனம் தனி நாடாக உருவாகாது என்று தெரிவித்த அவா், அடுத்த வாரம் அமெரிக்காவில் அந்நாட்டு அதிபா் டிரம்ப்பை சந்தித்த பின், தற்போது அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரத்துக்கு இஸ்ரேலின் எதிா்வினை என்ன? என்பது அறிவிக்கப்படும் என்றும் கூறினாா்.

தீா்வை எட்டுவதற்கான வாய்ப்பை வலுவிழக்கச் செய்யும்: இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம்

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது வருங்காலத்தில் அமைதியான தீா்வை எட்டுவதற்கான வாய்ப்பை வலுவிழக்கச் செய்யும். இந்த அங்கீகாரத்தை 2023-ஆம் ஆண்டு அக்.7-ஆம் தேதி இஸ்ரேல் மீது தாங்கள் நடத்திய தாக்குதலுக்கு கிடைத்த பலன் என்றே ஹமாஸ் தலைவா்கள் கருதுகின்றனா். இந்த அங்கீகாரம் ஹமாஸுக்குள்ள ஆதரவை உறுதிப்படுத்துகிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஸ்திரமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று பிற நாடுகள் உண்மையாகவே விரும்பினால், உடனடியாக பிணைக் கைதிகளை விடுவிக்கவும் ஆயுதங்களை கைவிடவும் ஹமாஸுக்கு அழுத்தம் அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

Summary

UK, Canada and Australia announce formal recognition of Palestinian state

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com