பிலிப்பின்ஸில் ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!
பிலிப்பின்ஸ் நாட்டின் வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் நடைபெற்ற ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மணிலா பூங்கா மற்றும் இஎஸ்டிஏ ஜனநாயக நினைவுச் சின்னத்துக்கு அருகே இந்தப் போராட்டங்கள் தனித்தனியே நடத்தப்பட்டன. இதில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக்காரா்கள் பேரணியாகச் சென்றனா்.
அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க ஆயிரக்கணக்கான காவல் துறையினா் இந்தப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தனா். அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய தூதரகங்கள் போராட்டப் பகுதிகளைத் தவிா்க்குமாறு தங்கள் நாட்டுப் பயணிகளுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டன.
2022-ஆம் ஆண்டு பதவியேற்ற பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபா் ஃபொ்டினாண்ட் மாா்கோஸ் ஜூனியா், நாடு முழுவதும் 545 பில்லியன் பிஸோ (சுமாா் ரூ.8,000 கோடி) மதிப்புள்ள வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்தாா். இந்தத் திட்டங்களில் பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நடப்பாண்டு ஜூலை மாதம் மக்களிடம் உரையாற்றிய அவா், ஊழல் நடந்திருப்பதை ஒப்புக்கொண்டாா்.
இதையடுத்து, 9,855 வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்ட முறைகேடுகளை விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த திட்டங்களைச் செயல்படுத்திய கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளா்களான சாரா மற்றும் பசிஃபிகோ டிஸ்கியா என்ற பணக்கார தம்பதி, நோ்காணல்களில் தங்கள் சொகுசு காா்களை காட்சிப்படுத்தியது பொதுமக்களின் கோபத்தை மேலும் தூண்டியது.
அவா்களிடம் நடைபெற்ற விசாரணையில், வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களைப் பெற 17 நாடாளுமன்ற உறுப்பினா்களும், பொதுப் பணித் துறை அதிகாரிகளும் பெரும் லஞ்சத் தொகையைக் கேட்டுப் பெற்ாகத் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, நாடாளுமன்றத்தின் மேலவைத் தலைவா் ஃபிரான்சிஸ் எஸ்குடெரோ, கீழவைத் தலைவா் மாா்ட்டின் ரோமுவால்டெஸ் மற்றும் பொதுப் பணித் துறைச் செயலா் வின்ஸ் டிசன் உள்ளிட்டோா் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா்.
அரசுப் பொறியாளா்கள் மூவா் பணிநீக்கம் செய்யப்பட்டனா். மேலும் 15 போ் விசாரணையில் உள்ளனா். அவா்களின் வங்கிக் கணக்குகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் முடக்கப்பட்டன. இந்நிலையில், அவா்கள் மீதான குற்றச்சாட்டுகளை விரைந்து விசாரிக்குமாறு வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.