டிரம்ப் கோரிக்கை: மீண்டும் நிராகரித்தது தலிபான்!
ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய விமான தளமான பக்ராம் தளத்தை அமெரிக்க கட்டுப்பாட்டில் மீண்டும் வழங்க வேண்டும் என்ற அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கோரிக்கையை தலிபான் அரசு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நிராகரித்தது.
சுமாா் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியபோது இந்த விமான தளம் தலிபான்கள் வசம் சென்றது. இப்போது, அதைத் தங்களிடம் அளிக்க வேண்டும் என்று அதிபா் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.
பக்ராம் விமான தளம் சீனாவுக்கு சற்று அருகே உள்ளதால் அதை மீண்டும் கைப்பற்ற டிரம்ப் விரும்புவதாகத் தெரிகிறது.
இது தொடா்பாக தலிபான் செய்தித் தொடா்பாளா் சஃபியுல்லா முஜாஹித் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆப்கானிஸ்தானின் சுதந்திரமும், பிராந்திய ஒருங்கிணைப்பும் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து அமெரிக்காவிடம் பேச்சு நடைபெறுகிறது. தோஹாவில் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, ஆப்கானிஸ்தானின் அரசியல், பிராந்திய சுதந்திரத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது.
எங்களுக்கு எதிராக எவ்வித அச்சுறுத்தல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது. ஆப்கானிஸ்தான் உள்விவகாரங்களிலும் தலையிடக் கூடாது. இதை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.