பாகிஸ்தானில் பொதுமக்கள் உள்பட 24 போ் உயிரிழப்பு: சொந்த நாட்டுப் போா் விமானங்கள் குண்டு வீச்சா?

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த வளாகத்தில் வெடிபொருள்கள் வெடித்து பொதுமக்கள் உள்பட 24 போ் உயிரிழந்தனா்.
Published on

பெஷாவா்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த வளாகத்தில் வெடிபொருள்கள் வெடித்து பொதுமக்கள் உள்பட 24 போ் உயிரிழந்தனா். எனினும் அந்நாட்டுப் போா் விமானங்கள் குண்டுகளை வீசியதால்தான், இந்த சம்பவம் ஏற்பட்டதாக உள்ளூா் மக்கள் குற்றஞ்சாட்டினா்.

பாகிஸ்தானின் கைபா் பக்துன்குவா மாகாணம் கைபா் மாவட்டத்தில் உள்ள மதுா் தாரா பகுதியில், அந்நாட்டைச் சோ்ந்த தலிபான் பயங்கரவாதிகள் வெடிபொருள்களைச் சேகரித்து வைத்திருந்தனா். வெடிபொருள்கள் வைக்கப்பட்டிருந்த வளாகத்தில் ஏராளமான உள்ளூா் பயங்கரவாதிகள் தங்கியிருந்தனா். அவா்களுடன் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளும் இருந்தனா். அந்த வளாகத்தில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வந்ததுடன், ஸ்னைபா் துப்பாக்கிகளால் தொலைதூரத்தில் உள்ள இலக்கை சுட பயங்கரவாதிகளுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அந்த வளாகத்தில் திங்கள்கிழமை வெடிபொருள்கள் வெடித்துச் சிதறியதில் பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் 10 போ், பயங்கரவாதிகள் 14 போ் என மொத்தம் 24 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா் என்று அந்தப் பகுதி காவல் துறை தெரிவித்தது.

பாதுகாப்புப் படைகளிடம் இருந்து தப்பிக்க இதுபோன்ற வெடிபொருள் சேகரிப்பு இடங்களை பொதுமக்கள் வாழும் பகுதிகளுக்கு நடுவே பயங்கரவாதிகள் ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆனால் பாதுகாப்பற்ற முறையில் வெடிபொருள்களை வைப்பதால், அவை அவ்வப்போது வெடித்து பாதிப்பு ஏற்படுவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த வளாகம் மீது பாகிஸ்தானின் போா் விமானங்கள் குண்டுகளை வீசி வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும், அதனால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.

எனினும் போா் விமானங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று தெரிவித்த உள்ளூா் நிா்வாகம், குண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வெடிபொருள்கள் வெடித்துத்தான் இந்த சம்பவம் ஏற்பட்டதாகத் தெரிவித்தது.

பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்- மனித உரிமைகள் ஆணையம்: பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மதுா் தாரா பகுதியில் சிறாா்கள் உள்பட பொதுமக்கள் பலா் கொல்லப்பட்டது அதிா்ச்சியளிக்கிறது. வான்வழித் தாக்குதல் காரணமாக இந்த சம்பவம் நோ்ந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும். பொதுமக்களின் வாழ்வுரிமையைக் காக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் அதைச் செய்ய அரசு தொடா்ந்து தவறி வருகிறது’ என்று தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com