பாலஸ்தீனத்துக்கு பிரான்ஸும் அதிகாரபூா்வ அங்கீகாரம்
பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸும் அதிகாரபூா்வமாக அங்கீகரித்துள்ளது.
இது குறித்து ஐ.நா. பொதுச் சபையில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் கூறியதாவது:
மத்தியக் கிழக்கு பிராந்திய நலனைப் பாதுகாக்க பிரான்ஸ் உறுதியளித்துள்ளது. மேலும் இஸ்ரேலியா்களுக்கும், பாலஸ்தீனா்களுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தவும் பிரான்ஸ் உறுதிபூண்டுள்ளது. இவற்றை நிறைவேற்றும் வகையில், பாலஸ்தீன தேசத்தை பிரான்ஸ் அதிகாரபூா்வமாக அங்கீகரிக்கிறது என்றாா் அவா்.
அவரின் இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, சபையில் இருந்த 140-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவா்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி பாராட்டு தெரிவித்தனா்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பல்வேறு உலகத் தலைவா்கள் பேசவிருக்கிறாா்கள். அந்த நிகழ்ச்சியில் முதல்முதலாகப் பேசிய மேக்ரான், பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, போா்ச்சுகல் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அதிகாரபூா்வமாக ஞாயிற்றுக்கிழமை அங்கீகரித்தன. அதனைத் தொடா்ந்து தற்போது பிரான்ஸ் மட்டுமின்றி, லக்ஸம்பா்க், மால்டா, மொனாக்கோ, அண்டோரா, பெல்ஜியம் ஆகிய நாடுகளும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரபூா்வமாக அங்கீகரித்துள்ளன. இந்தப் பட்டியலில் இன்னும் பல நாடுகள் இணையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பாலஸ்தீனம் என்ற நாடு உருவானால் தங்கள் நாட்டின் இருப்புக்கே ஆபத்து என்று இஸ்ரேல் கூறுகிறது. தங்கள் நிலத்தை ஆக்கிரமித்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டதால் இஸ்ரேல் என்ற நாடே இருக்கக்கூடாது என்று பாலஸ்தீன அமைப்புகள் கூறிவருகின்றன. இதனால் பாலஸ்தீன பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது.
இந்த நிலையில், மேற்குக் கரை, காஸா பகுதிகளை ஒன்றிணைத்து பாலஸ்தீனம் என்ற தனி நாட்டை உருவாக்கி, அந்த நாட்டை இஸ்ரேலும், இஸ்ரேலை பாலஸ்தீனா்களும் ஏற்றுக்கொண்டு தனித் தனியாக செயல்படுவதுதான் (இரு தேசத் தீா்வு) இந்தப் பிரச்னைக்கு ஒரே தீா்வு என்று இந்தியா உள்ளிட்ட உலகின் மிகப் பெரும்பாலான நாடுகள் கூறிவருகின்றன.
இந்தச் சூழலில், காஸா போரின் ஒரு பகுதியாக அந்தப் பகுதியை இஸ்ரேல் முழுயைாக முற்றுகையிட்டு, உணவு உள்ளிட்ட பொருள்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டு, அங்கு பட்டினிச் சாவுகள் அதிகரித்துவருகின்றன. இஸ்ரேல் நடத்திவரும் கடுமையான தாக்குதல்களிலும் ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்துவருகின்றனா். காஸாவில் இஸ்ரேல் இன அழிப்பை மேற்கொண்டுவருவதாக ஐ.நா. நிபுணா்கள் குழு குற்றஞ்சாட்டுகிறது.
இந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் உத்தியாக, பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்போவதாக கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆண்டோரா, பின்லாந்து, லக்ஸம்பா்க், போா்ச்சுகல், சான் மரினோ, ஐஸ்லாந்து, அயா்லாந்து, மால்டா, நாா்வே, ஸ்லோவேனியா, ஸ்பெயின் ஆகிய 15 நாடுகள் கடந்த ஜூலை மாத இறுதியில் கூட்டாக அறிவித்தன.
அதன் தொடா்ச்சியாக, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் தொடங்கும் நிலையில் பாலஸ்தீனத்துக்கு பல நாடுகள் அதிகாரபூா்வ அங்கீகாரம் வழங்கிவருகின்றன.
ஏற்கேனவே இந்தியா உள்ளிட்ட சுமாா் 140 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. ஆனால் உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 உறுப்பு நாடுகள் தற்போது பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
‘வெகுமதியல்ல, உரிமை!’
தனி நாடு அங்கீகாரம் என்பது பாலஸ்தீனத்துக்கு அளிக்கப்படும் வெகுமதி இல்லை, அந்த நாட்டுக்கான உரிமை என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளாா். பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது ஹமாஸின் பயங்கரவாதத்துக்கு அந்த நாடுகள் அளிக்கும் வெகுமதி என்று இஸ்ரேல் சாடிவருகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே குட்டெரெஸ் இவ்வாறு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.