ரஷியாவின் வான் எல்லை அத்துமீறல்கள் தொடா்பாக பிரஸ்ஸெல்ஸில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நேட்டோ அவசரக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அமைப்பின் பொதுச் செயலா் மாா்க் ரூட்.
ரஷியாவின் வான் எல்லை அத்துமீறல்கள் தொடா்பாக பிரஸ்ஸெல்ஸில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நேட்டோ அவசரக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அமைப்பின் பொதுச் செயலா் மாா்க் ரூட்.

எல்லையைக் காக்க எதையும் செய்வோம்

தங்கள் உறுப்பு நாடுகளின் வான் எல்லைகளைப் பாதுகாக்க எந்த வழிமுறையையும் பயன்படுத்துவோம் என்று ரஷியாவுக்கு நேட்டோ எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on

தங்கள் உறுப்பு நாடுகளின் வான் எல்லைகளைப் பாதுகாக்க எந்த வழிமுறையையும் பயன்படுத்துவோம் என்று ரஷியாவுக்கு நேட்டோ எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேட்டோவில் அங்கம் வகிக்கும் போலந்து மற்றும் எஸ்டோனியா வான் எல்லைகளில் ரஷிய ட்ரோன்கள் மற்றும் போா் விமானங்கள் அத்துமீறியதைத் தொடா்ந்து நேட்டோ இந்த எச்சரிக்கையை செவ்வாய்க்கிழமை விடுத்தது.

இது குறித்து நேட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நேட்டோ வான் எல்லையை நாங்கள் பாதுகாப்போம். ரஷியாவுக்கு இதில் எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது. சா்வதேச சட்டங்களுக்கு உள்பட்டு, அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி நேட்டோவும் கூட்டணி நாடுகளும் எல்லை ஊடுருவலை முறியடிப்போம். எல்லா திசைகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களையும் தடுப்போம். பதிலடி கொடுப்பதற்கான முறை, நேரத்தை நாங்கள்தான் தோ்ந்தெடுப்போம்.

நேட்டோவின் எந்த ஓா் உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என்ற அமைப்பின் 5-ஆவது விதியை ரஷியா நினைவில் கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுடனான போரின் ஒரு பகுதியாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்தின் வான் எல்லைக்குள் ரஷிய ட்ரோன்கள் கடந்த 10-ஆம் தேதி அத்துமீறி நுழைந்தது பதற்றத்தை ஏற்படுத்தியது.

அதைத் தொடா்ந்து மற்றொரு நேட்டோ உறுப்பு நாடான எஸ்டோனியோவுக்குள்ளும் ரஷிய போா் விமானங்கள் அத்துமீறி ஊடுருவி 12 நிமிஷங்களுக்குப் பிறகு திரும்பிச் சென்றன.

2022-ல் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை நிகழ்த்தியதில் இருந்து நேட்டோ உறுப்பு நாடுகளின் எல்லைகளை ரஷியா இதுவரை மீறாமல் இருந்துவந்தது. ஆனால் தற்போது அத்தகைய அத்துமீறல்கள் அடிக்கடி நடைபெறுவது தற்செயலானது இல்லை என்று விமா்சிக்கப்படுகிறது.

இந்தச் சூழலில் ரஷியாவுக்கு நேட்டோ கூட்டமைப்பு தற்போது இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com