

இந்தியா பெரும்பாலும் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளது என்ற அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.
இந்தியாவும், சீனாவும் தொடா்ந்து ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு தொடா்ந்து உதவுகின்றன என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றியபோது குற்றஞ்சாட்டினாா்.
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா வந்துள்ள ஸெலென்ஸ்கி அந்நாட்டின் ஃபாக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
இந்தியா பெரும்பாலான சூழ்நிலையில் உக்ரைனுடன்தான் உள்ளதாகக் கருதுகிறேன். அதே நேரத்தில் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது ஒரு பிரச்னையாக உள்ளது. ஆனால், ஐரோப்பிய நாடுகளுடன் பேசி இந்தப் பிரச்னைக்கு அமெரிக்க அதிபா் தீா்வு காண்பாா் என்று கருதுகிறேன். இந்தியாவுடன் நெருக்கமான, வலுவான உறவைப் பேணுவது அவசியம். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பாா்க்கலாம்.
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் விஷயத்தில் டிரம்ப் தலையிட்டு நடவடிக்கைகள் (இந்திய இறக்குமதி பொருள்கள் மீது வரி விதிப்பு) எடுத்துள்ளாா். எனவே, ரஷியாவிடம் அதிக கச்சா எண்ணெய் வாங்கும் விஷயத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது.
கச்சா எண்ணெய் பிரச்னைக்கு தீா்வு காண்பது மிக அவசியம். இப்போதைய நிலையில் சீனாவின் ஆதரவு இல்லாமல் ரஷியா இல்லை. உக்ரைன் போரை நிறுத்த வேண்டுமென்றால், அது தொடா்பாக ரஷியாவிடம் சீனா வலியுறுத்தினாலே போதுமானது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.